அடுத்த பிறவியில்
தமிழனாகப் பிறப்பேன்
அப்போ என் குலம்
ஆண்டுகொண்டிருக்கும்
கொடியும் , கோட்டையும்
வாளும் முரசும்
படையும் படைத்த
பைந்தமிழ் மண்ணில்
யார் கட்டளைக்கும்
அடங்கா ஒரு புலி
ஒப்ப வீரனாய்
உறுமி நடப்பேன்
மார்பு தூக்கி
மலை வலம் வருதல்
ஆவி போலும் ஆனா
என் தமிழை
அந்நாள் எவன் பழித்தாலும்
தாவி வீழ்த்தி பாடை தந்து
தமிழ் ஊரெல்லாம்
சாவலாம் உணர்வேன்
பன்னிராயிரம் படை வரும் எனினும்
கண் இமைப் பொழுதில்
வென்று காட்டுவேன்
என்னை போலவே
இளைஞர் பல்லோர்
குண்டுகள் தாங்கி
குருதியில் தோய்ந்து
சண்டைக்களத்தில்
இதோ சாய்கின்றேன்
அடுத்த பிறவியும் அடியேன்
தடித்த பச்சை
தமிழ்ப் பிறவியே .
இது காசி ஆனந்தன் கவி வரிகள் ஒவ்வொரு தமிழ் வீரனின் உணர்வுகளும் எப்படி இருக்கும் என்பதற்கு இக்கவிதை ஒரு எடுத்துக்காட்டு
ஒரு மாவீரரின் தந்தை 2017 நவம்பர் 13 அன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்தை ஒட்டி இக் கட்டுரையை எழுத விளைகின்றேன்
1982 ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகள் இயக்கம்.மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.வெளி உலகத்துக்குத் தெரியாமல் தங்களை
சமூகத்தில் இருந்து மறைத்துக்கொண்டு, சமூகம் சார்ந்த இனத்துக்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு நகர்வுகளும் மிக அவதானமாக நகர வேண்டிய காலம் அது கரந்தடிப்படைத் தாக்குதல் முறையில் இயக்க நகர்வுகள் நடந்துகொண்டிருந்தது.
பொதுமக்களிடம் தங்களை வெளிக்காட்டவும் முடியாது. உதவிகள் கேட்கவும் முடியாது.உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாமே தாங்களாகவே தேடிக்கொள்ள வேண்டும். ஒரு சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய சூழ்நிலை இது .
விடுதலை மீதான பற்று, சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது பல தமிழர்களுக்கு வெறுப்பு இருந்தாலும், அவர்களை இனம் காண்பது எப்படி? அவர்களின் ஆதரவினை எப்படிப் பெறுவது,? அப்படிப் பெறும்போது அவர்கள் மீதான நம்பிக்கை எப்படிக் கொள்வது ? ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டி இருந்தது .
போராளிகள் என்று புறப்பட்டவர்களை விட இவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு சிங்கள படைகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்களின் கடமையாக இருந்தது .
“தான் போக வழியில்லை தவிலும் ஒரு மாராப்பு” என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. அதே போல் ஒரு நிலைதான் அன்று இருந்தது.
ஒரு சிறு நகர்வுத் தடம் கிடைத்தால் கூட அதனை தேடி மோப்பம் பிடித்து பின் தொடர்வதற்கு காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் கண் மூடாமல் காத்திருப்பார்கள்.
இப்படியான ஒரு நாள் தான் அது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பல கல்வியாளர்கள் , பொதுமக்கள் இருந்தார்கள். அவர்களில் சிலருடன் இயக்க உறுப்பினர்கள் சில தேவைகளின் நிமித்தம் பழகிக்கொண்டு இருந்தார்கள். இவர்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு .திருமதி நித்தியானந்தன் நிர்மலா குடும்பமும் ஒன்றாக இருந்தது. இவர்களின் வீட்டுக்கு இயக்க உறுப்பினர்கள் வந்து போவதை சிறிலங்காப்படையினர் மோந்து மணம் பிடித்திருந்தார்கள் .
இந்த வகையில் திரு .திருமதி நிர்மலா நித்தியானந்தன் அவர்களின் வீட்டுக்கு சிறி லங்கா காவல்துறையினர் வரப்போகிறார்கள் என்பதை அறிந்த புலிகள் அந்த வீட்டுக்கு ஒரு போராளியை அனுப்பி குறிப்பிட்ட வீட்டினரை வேறு இடம் மாறி இருக்குமாறு சொல்லி அனுப்பி இருந்தார்கள்.
குறிப்பிட்ட போராளி அந்த வீட்டுக்குச் சென்று நடக்கவிருக்கும் சம்பவத்தைச் சொன்னார். வீட்டுக்காரர்களும் சம்பவத்தை கேட்டறிந்தார்கள். ஆனால் அதன் தாக்கம் என்ன என்பதை அறிந்திருக்கவில்லை.
போராளியை நன்கு அறிந்திருந்த அவர்கள் அவருக்கு அன்றாவது ஒரு நல்ல உணவு கொடுப்பதற்கு ஆசைப்பட்டார்கள். இதன்படி அந்தப் போராளியை இருக்க வைத்து விட்டு சமையல் வேலையில் தீவிரமாக இருந்தார்கள் .இந்த நேரத்தில் சொல்லி வைத்தல்போல் இராணுவ வண்டியும் வந்து நின்றது. வீடு சுற்றி வளைக்கப்படுவதாக படுவதாக அறிந்த அவர் ஒரு பக்கத்தால் ஓடி மதிலால் ஏறிக் குதிக்கும் போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூடு அவர் வயிற்றில் பாய்கிறது.
அந்தக் காலத்தில் இயக்கத்திடம் இருந்த மிகப் பெரிய வாகனம் மீதி வண்டி மாத்திரமே
நல்லவேளையாக மதிலுக்கு வெளிப்பக்கத்தில் வீழ்ந்த அவர் வயிற்றிலே ஏற்பட்ட காயத்துடன் வாகனத்தையும் விட்டு விட்டு ஓடும்போதுவீதியில் வந்த ஒருவருடன் முட்டுப்படுகிறார் இருவரும் ஒரே கணத்தில் வீழ்ந்து எழுந்து சுதாகரித்து கொள்கிறார்கள்
அடுத்த நிமிடமே எதிர்விளைவு எதனையும் கருதாத அந்த மனிதர் இராணுவத்தினரின் வே ட்டுக்களைவிட விவேகமாக அவரது மீது வண்டியில் ஏற்றுக் கொண்டு சங்கர் அடையாளம் காட்டிய அன்ரன் என்ற போராளியிடம் இவரை ஒப்படைக்கிறார் .இவர்தான் பின் நாட்களில் ஈழ நாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திரு ஜெயராஜ்
அன்று நிர்மலா, நித்தியானந்தன் அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் .
ஓடித்தப்பிய போராளிக்கு மருந்து கட்டுவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாது நிலை சக உறுப்பினர்களாலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது .
பொதுவாக அந்த நேரத்தில் தமிழகத்துக்கு சில தேவைகளுக்காக போராளிகள் சென்று வருவது வழக்கம். அங்கு வைத்து குறித்த போராளிக்கு மருந்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனால் வண்டி படகு) பிடித்து உடனடியாக தமிழ் நாட்டுக்குச் செல்வதற்குப் பல தடைகள் ஏற்படுகின்றன காயப்பட்ட போராளியை தேடி யாழ்ப்பாணப் பகுதிகள் எல்லாம் சுற்றி வளைப்புக்களும் வீதிச் சோதனைகளும் நடக்கின்றன இப்படியான சூழ்நிலையில் காயப்பட்டவரை உடனடியாக மருத்துவச் சிகிச் சைக்கு கொண்டு செல்வது தடைப்படுகிறது
யாழ்ப்பாணம் இருந்து வல்வெட்டித்துறை சென்று அங்கிருந்து வண்டி எடுத்து தமிழ் நாட்டுக்கு போவதற்கு ஏற்பட்ட தாமதம் போராளியின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதித்திருந்தது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பழைய நெடிய அரசியல் வாதியின் உதவியோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு வைத்தியரால் வைத்தியம் செய்யப்பட்டாலும் உரிய நேரத்தில் மருந்து செய்வதில் ஏற்பட்ட தாமதம் மருத்துவ உதவியின் பலன் அற்றுப்போகின்றது.
1982 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27திகதி எவரும் நினைவு தப்பும் போது அரற்று கையில் “அம்மா …. அம்மா… ” என்றே சொல்வர். ஆனால் இவரோ “தம்பி… தம்பி … ” என அரட்டினார்.தலைவர் பிரபாகரன் அவர் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருந்தார். என்பதற்கு இது ஒரு உதாரணம்.
புலிகளின் முதல் வித்து உயிர் பிரிகிறது.
“இதுவே மாவீரர் தினத்தின் நாள்”
முதல் வித்தான சங்கர் வீரச்சாவடைந்தார். அந்த நாளுக்கு முதல் நாள் தான் தலைவர் அவர்களின் பிறந்தநாள். ஆனால், சங்கர் வலியால் துடித்த நாள் நவம்பர் 26. என்பதால் அவர் ஒரு நாளும் தனது பிறந்த நாளைக்கு கொண்டாடியதே இல்லை .
சங்கர் அவர்கள் தான் புலிகளின் முதல் வித்தாக இருந்தாலும் இவரின் மரணம் போராளிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியவில்லை .சங்கர் அவர்களின் வித்துடல் தமிழ் நாட்டில் ஒரு இடத்தில் அக்கினியுடன் சங்கமம் ஆகிவிட்டது. இது புலிகளின் முதல் மாவீரரின் கதை.
ஒரு காட்டிக்கொடுப்பு சம்பவத்தால் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சீலன்,ஆனந்ஆகிய இருவரும் 15/07/1983 அன்று வீரச்சாவடைந்தார்கள் இதற்கு எதிர்த் தாக்குதலாக 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் 23. நாள் அன்று திருநெல்வேலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13.இராணுவத்தினர் கொல்லப்பட்டு இலங்கை அரசாங்கத்தையும், இராணுவத்தினரையும் கதிகலங்க வைத்தின் போதே செல்லக்கிளி அவர்கள் வீரச் சாவடைந்தார்.
சீலன் , ஆனந் ஆகியோரின் வித்துடல்கள் கிடைக்க வில்லை ஆனால் லெப் செல்லக்கிளி அம்மானின் வித்துடல் கிடைத்தும் இறுதி நிகழ்வு கூட இரகசியமாகத்தான் நடத்தப்பட்டது.
லெப் செல்லக்கிளி அம்மானின் புகைப்படம் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டு தாக்குதலுக்கான உரிமையும் கோரப்பட்டது.
ஒரு துயிலுமில்லத்தில் வைத்து அஞ்சலி நிகழ்வு செய்து வித்துடல் விதைக்கப்பட முடியாத காலமாக அந்தக்காலம் இருந்தது .
சங்கர், சீலன் , ஆனந் ,செல்லக்கிளி அம்மான் அவர்களின் இழப்புக்கள் என்பது மிகவும் வேதனையானது, தாங்கிக்கொள்ள முடியாத துயரமாகும். சுமார் 29 பேர் அளவிலேயே இருந்த இயக்கத்தில் நான்கு உறுப்பினர்களின் இழப்பு பேரிழப்புத்தான்.
இதன் பின்பு இயக்கம் இமயம்போல் வளர்ந்தது. பல ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்தார்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.
சங்கர், சீலன் , ஆனந் ,செல்லக்கிளி அம்மான் முதலான வித்துக்கள் வீழ்ந்து விருட்ஷமாக வளர்ந்துகொண்டிருந்தது போராட்டம் வளர வளர வீரச்சாவு கூடிக்கொண்டிருந்தது. ஒரு விருட்ஷம் வளரும் போது அதன் இலைகள் உதிர்வதுபோல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருந்தது.
ஆனால் ஒவ்வொரு மரணங்களும் தமிழீழத்தின் சரித்திரத்தில் பதிவாகிக்கொண்டு இருந்தது. இந்தச்சம்பவங்களில் எல்லாம் பல முன்னுரிமை உடைய நிகழ்வுகளும் நடந்தது .
முதலாவது கரும்புலியாக மில்லர் அவர்களின் வீரச்சாவு பதியப்பட்டது. நெல்லியடி பாடசாலையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் ஒரு புதிய சரித்திரம் படைத்தது .
முதலாவது வரிசையில் வீர மரணங்களை குறிப்பிடலாம் .
பெண் புலி மாவீரர்.
சைனட் கடித்த மாவீரர் .
கடற்கரும்புலி மாவீரர் .
வான்படைத் தாக்குதல் மாவீரர்
வேவுப்படை மாவீரர்
மாமனிதர் , நாட்டுப்பற்றாறார் இழப்புக்கள்
குமரப்பா ,புலேந்திரன் உட்பட 12. வேங்கைகள்
இந்த வகையில் திலீபன் , அன்னை பூபதி தியாகம்கள் கூட சரித்திரம் படைத்தவைதான்.
சங்கர் அவர்களின் முதலாவது வீரச்சாவிலிருந்து 2009 வைகாசிமாதம் 18.திகதி நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் நாற்பது ஆயிரத்துக்கு மேற் பட்ட மாவீர்கள் இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் .
கடைசி நாட்களில் நடைபெற்ற இன அழிப்பு யுத்த காலத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் சரியான கணக்கெடுப்புக்கள் பதிவு செய்யப்படவில்லை.
அதே போல் தான் லட்சத்துக்கு மேற் பட்ட பொது மக்களின் மரணங்கள் .
பல ஆயிரக்கணக்கான புலி வீரர்களின் இரத்தமும், சதையும் புதைக்கப்பட்ட லட்சக்கணக்கான பொது மக்களின் கண்ணீரால் நனைந்து கழுவப்பட்டதுதான் துயிலுமில்லங்கள்.
இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேற ஆரம்பித்த பின் 1989யில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னும் இடத்தில் தான் முதலாவது மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. குறிப்பிட்ட மாவட்டத்தை விட்டு இந்திய இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர்.
மாவீரர் தினம் 1990 முதல் ஆரம்பத்தில் நள்ளிரவு 12.மணிக்கு தீபம் ஏற்றுதல் மணி ஒலித்தல் தலைவரின் உரை என்ற வரிசைக் கிராமத்தில் மேற் கொள்ளப்பட்ட்து.
பின்னர் இக்கட்டான காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு நேரமாற்றம் செய்யப்பட்டது. மாவீரர் தினம் என்பது ஒரு களியாட்ட நிகழ்வாகவோ, ஆடம்பர நிகழ்வாகவோ இல்லாமல் உணர்வு பூர்வமான நிகழ்வாகவே நிகழ்ந்து வருகின்றது .
ஆனால் இன்று மாவீரர் துயிலும் இல்லங்களில் வைத்து சிலர் அரசியல் லாபம் தேட முனைவது வெட்கக்கேடான விடயமாக இருக்கின்றது .
மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவு செய்கிறோம் என்று கூறிக்கொண்டு தங்களுடைய கட்சியின் பதாகைகளைப் போட்டு பின்னால் அவர்கள் நின்று படம்பிடித்து விளம்பரம் தேடுகிறார்கள்
மட்டக்களப்பை ச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப்பகுதியில் ஒரு துயிலுமில்லத்தை வெளியாக்கி துப்பரவு செய்வது போல் படம் பிடித்து விளம்பரம் காட்டியிருந்தார்.
புழுதி படியாத மேனியுடனும் , கசங்காத ஆடையுடனும் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து விட்டு ஆடம்பரமான வாகனத்தில் சென்ற அந்த பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்து தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டி இருக்கின்றது.
யுத்தம் உக்கிரமான 2006 ம் ஆண்டு காலப்பகுதியில் உயிலங்குளம், வன்னி விளாங்குளம் என பல துயிலுமில்லங்கள் புலிகளால் விடப்பட்டு பின்வாங்கப்பட்டிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் விஸ்வமடு என்ற இடத்தில் உள்ள பெரிய காட்டை அழித்துத்தான் ஒரு துயிலுமில்லம் உருவாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்களில் மட்டக்களப்புபைச் சேர்ந்த போராளிகள் கூடுதலாக இருந்தனர் .
இவர்களே காடுகள் வெட்டி வேர்கள் பிடுங்கி நிலம் திருத்தி துயிலும் இல்லத்தை உருவாக்கினார்கள். இந்தத் துயிலுமில்லத்தில் முதலாவதாக விதைக்கப்பட்டதும் மடடக்களப்பு . அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாவீரரின் வித்துடல்தான் .
விசுவமடு துயிலும் இல்லத்தில் 1200. மேற் பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.
தாங்களே துயிலுமில்லம் உருவாக்கி தாங்களே சவப்பெட்டிகளைச் செய்து செங்களம் ஆடி வீரச்சாவடைந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தான் இந்த துயிலுமில்லங்களில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் தங்களுடைய வேலைகளை விளம்பரப்படுத்தவில்லை. இது ஒரு கடமையாகவே செய்தார்கள்.
கண்ணீராலும், செங்குருதியாலும் பல்லாயிரம் உடல்களால் நிரப்பப்பட்ட புனித தம் தான் இந்த துயிலும் இல்லம் . இது ஒவ்வொரு மானமுள்ள தமிழனுக்கும் கோயில் .
இப்படிப்பட்ட புனித தலத்தை இன்றைய வங்குரோத்து பிடித்த அரசியல் வாதிகள் யாரும் களங்கப் படுத்தி விடாதீர்கள். உங்களின் அரசியல் முகவரிகளை துயிலும் இல்லங்களில்பதித்து மாவீரர்களையும் அவர்களை இந்த மண்ணுக்கு தந்த பெற்றோரையும் அவமதித்து விடாதீர்கள் .
உண்மையாகவே நீங்கள் எவருமே மாவீரர் தின நிகழ்வு நடந்த காலங்களில் எல்லாம் துயிலும் இல்லங்களின் பக்கம் எட்டிப் பார்க்காதவர்கள் .
இன்று மட்டும் என்ன உங்களுக்கு மாவீரர்கள் மீதும் துயிலுமில்லங்கள் மீதும் பற்று வந்து விட்டது
தயவு செய்து, தயவு செய்து தயவுசெய்து … உங்களின் உளுத்துப்போன அரசியல் கருத்துக்களைஇங்கே விதைக்க நினைக்காதீர்கள் உங்களை விளம்பரப்படுத்த மாவீரர்களை பயன்படுத்தாதீர்கள்
இது புனிதமான நாள்
இங்கே அமைதிப் பேணுங்கள்
கண்ணீரோடு தங்கள் உறவினர்கள் உறைவிடத்தைக்காண ஓடிவரும் மக்களுக்கு உபத்திரம் செய்யாதீர்கள்.இது தங்கள் உறவினர்களின் ஆன்மாவோடு உறவினர்கள் உறவாடும் நாள். அவர்கள் தங்கள் வேதனைகளை கொட்டித் தீர்த்து ஒப்பாரி வைத்து அழ விடுங்கள். அவர்களின் ஆழமான அன்பை விதைத்து விட்டு போகட்டும் .
தேசியத் தலைவர் மாபெரும் மனிதர் பிரபாகரன் மட்டுமே இங்கே உரையாற்ற தகுதி பெற்றவர் .
எல்லோரும் வாருங்கள்
இது தமிழரின் சரித்திரத்தை உதிரத்தால் எழுதிய உறைவிடம்.
இது எல்லோருக்கும் பொது இடம்
அமைதியாக தீபம் ஏற்றுங்கள்
உங்கள் உறவுகளுக்காக வருடத்தில் ஒரு நாள் நீங்கள் அமைதி பெறுங்கள் .
மட்டக்களப்பிலிருந்து ஊரவன்.