முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கு உள்ளூராட்சி அமைச்சுக்கு உரிய முறையில் கோரிக்கையினை முன்வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 25 ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது.
அதன்போது உறுப்பினர் ரவிகரன் முதலமைச்சரிடம் வாய்மொழி மூலமாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 2014.01.27 ஆம் திகதி சபை அமர்வில் கொண்டு வந்திருந்ததாகவும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அதற்குபதிலளிக்குமாறும் கேட்டிருந்தார்.
அதற்கமைய குறித்த வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க விரும்பினால் விண்ணப்பத்தினை உள்ளூராட்சி அமைச்சிற்கு உரிய முறையில் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும். அதனூடாக சட்ட பூர்வமான அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்த முடியும். குறித்த தூபி அமைப்பதற்கு வடக்கு மாகாண சபைக்கோ அல்லது எனக்கோ எவ்வித ஆட்சேபனையும் இல்லை .இதனை நாம் வரவேற்கின்றோம். ஒரு போதும் எதிர்க்கமாட்டோம். எனினும் முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையில் இருந்தது.
எனினும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தற்போதைய அரசாங்கம் விடயம் தொடர்பில் எதைக் கூறுவார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் உரிய முறையில் கோரிக்கை முன்வைத்தால் எங்களுடைய சிபாரிசை தெரியப்படுத்தி அரசிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்றால் பெற்றுக் கொள்வோம் என்றார்.
அத்துடன் வன்னியை ஆட்சி புரிந்த பண்டார வன்னியன் நினைவுத்தூபி ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினை வடக்கு அவை உறுப்பினர் ரவிகரன் சபையில் முன்வைத்தார். குறித்த விடயத்திற்கும் முறைப்படி உள்ளூராட்சி அமைச்சிற்கு கோரிக்கை விடுக்குமாறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடயங்கள் தொடர்பில் விரைவில் கோரிக்கை விடுப்பதாக உறுப்பினர் ரவிகரன் சபையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றைய அமர்வில் 11பிரேரணைகள் உள்ளடங்கலாக ஒரு கவனயீர்ப்புப் பிரேரணையும் சபையில் முன்வைப்பட்டது. அதற்கமைய 2012 ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் நடாத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வில் எச். என்.டி. ஏ, எச்.என்.டி. எம் பட்டதாரிகளில் எச்.என்.டி.ஏ பட்டதாரிகள் தவிர ஏனைய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் 35 வயதக்கு மேற்பட்டவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு அவ்வாறு நடாத்தப்படவில்லை. எனவே கடந்த அரசின் அரசியற்செயற்பாடுகள் காரணமாக நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே தற்போதைய 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக இவர்களது நியமனத்தை உள்ளடக்குமாறு கோரி அவைத்தலைவர் பிரேரணை ஒன்றினை சபையில் கொண்டு வந்தார்.
அதற்கு சபையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு குறித்தவிடயங்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதான கடிதம் ஒன்றினை அனுப்புவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அடுத்து உலக வங்கியால் நிதி பெற்று செய்யப்படுகின்ற வேலைகளை பலர் செய்யாது மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்வே முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் துணையாக நின்று மோசடிகளை மேற்கொண்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை ரவிகரன்கொண்டு வந்திருந்தார்.
உள்ளூராட்சி சபைகளில் இருக்கும் வெற்றிடங்களுக்கு உரிய முறையில் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும். என்பது ஒழுங்கு எனினும் இது மீறப்பட்டு வருகின்றது. எனவே நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் அரியரட்ணம் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட சபை உள்ளூராட்சி சபைகளில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய முறையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர் வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பில் 2 பிரேரணைகளை சமர்ப்பித்திருந்தார். அத்துடன் கல்வி அமைச்சரிடம் இருந்து பதில் பெறக்கூடிய 3 பிரேரணைகளை உறுப்பினர் சர்வேஸ்வரன் முன்வைத்தார். அத்துடன் உறுப்பினர் சிவயோகனால் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரேரணையை கொண்டுவந்தார். அதனையும் சபை ஏற்றுக் கொண்டது.