ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன்போதே ஆசிரியர் சங்க தலைவர் ஆ.இராசகுமாரன் இந்த அழைப்பினை விடுத்தார்.
மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐ.நா அறிக்கையை வெளியிடக் கோரி பேரணியொன்றை நடாத்துவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஒன்று கூடி இருவர் இருவராக பேரணியாக சென்று பரமேஸ்வரா சந்தியின் ஊடாக பலாலி வீதியூடாக கந்தர்மடம் சந்தியால் நல்லூர் வடக்கு வீதியை அடைந்து மகஜர் கையளிக்கவுள்ளோம்.
அதற்கமைய யாழில் உள்ள ஐ.நா அலுவலகர்களுக்கு அறிவித்துள்ளோம் அவர்கள் பேரணி முடிவடையும் பகுதிக்கு வரும் பட்சத்தில் அவர்களிடம் மகஜரை வழங்குவது என்றும் அவர்கள் வராத பட்சத்தில் எங்கள் பிரதிநிதிகள் ஐ.நா அலுவலகத்திற்குள் வந்து மகஜரைக் கொடுப்பது என்று இருக்கின்றோம்.
இந்தப் பேரணியானது வடக்கு அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன் பேரணியை மிகவும் அமைதியான முறையில் நடத்தவுள்ளோம். இது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பேரணியாக அமைகின்றது.
நாங்கள் ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளோம் என்பதைக் காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் எமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் இப்பேரணி ஏற்’பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு எங்கள் உணர்வுகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அனைவரும் நாளை காலை 9 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பேரணிக்கான அனுமதியும் பொலிஸாரின் அனுமதியையும் பெற்றுள்ளோம். மேலும் பேரணி முடிவில் கையளிக்கும் மகஜரில் பங்குபற்றும் பொது அமைப்புக்களின் பிரதிஜநிதிகளின் ஒப்பங்களை பெறவும் தீர்மானித்துள்ளோம்.
எனவே குறித்த அமைப்புக்கள் தங்களுடைய இரப்பர் முத்திரை இருந்தால் அதனைக் கொண்டு வந்து ஆசிரியர் சங்க காரியாலயத்தில் நாளை காலை 9 மணிக்கு வந்து ஒப்பம் இட முடியும்.
பல்கலைக்கழக சமூகமாகிய நாம் அனைவரையும் பேரணி வெற்றியளிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்பேரணியில் எவரும் அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள் . சுலோக அட்டைகளை நாங்கள் தயாரித்துள்ளோம். பிரத்தியேகமாக யாரும் கொட்டுவரும் அட்டைகள் கொண்டு செல்லப்பட மாட்டாது. ஒரே குடையின் கீழ் ஈழத்தமிழர்களாக கலந்து கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.