பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ ஏற்ற வேண்டும்!

0
176


தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் மாவீரர் நாளை தமிழ் அரசியல் வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறப்பினர் மு.மனோகரன் (காக்கா ) கூறியுள்ளார்.
இன்று (13) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
மேலும் அவர் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.
இந்த நிகழ்வானது எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.
குறிப்பாக இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.
சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.
முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.
பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும்.
எமது இந்த பிறப்புரிமைக்காக லெப்ரின்ன்ற் ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர்.
2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.
தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது.
அத்தோடு மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.
மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம்.
நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here