பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த பேச்சு, பாட்டு போட்டிகள்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
மாவீரர் நினைவு சுமந்த பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் இருதினங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த 11.11.2017 சனிக்கிழமை பாரிசு மக்ஸ்டொமி பகுதியில் பேச்சு தெரிவுப் போட்டி மற்றும் பாட்டு இறுதிப்போட்டிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் ஈகைச்சுடரினை 05.03.2009 அன்று புதுக்குடியிருப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை அரியமுதனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
கடந்த 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்னெவ் பகுதியில் அனைத்துப் பிரிவுகளுக்குமான மாவீரர் நினைவு சுமந்த பேச்சு இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 18.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ராதா வான்படையணியைச் சேரந்த லெப்டினன் கேணல் உருத்திரன், 24.03.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்டினன் மாவேந்தன் ஆகிய மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தினை 18.05.1984 அன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை செல்வத்தின் சகோதரி செலுத்தியிருந்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அடுத்து போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
கடந்தவாரம், மாவீரர் நினைவு சுமந்த கவிதை, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)