நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்?
நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே!
உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை
எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவோம்?
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல
எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள்
எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக
உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள்
எங்கள் நிம்மதிக்காக உங்கள்
சுகங்களைத் துறந்து போராடினீர்கள்
நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக
உங்கள் சாவூக்கான நாளை
குறித்தவர்கள் நீங்கள்
உண்மையாக எங்களை
நேசித்தவர்கள் நீங்கள் -அதனால்
உங்களிடம் மட்டுமே எங்கள்
உள்ளத்து வலிகளை
சொல்லி அழமுடியும்
அதனால்தான்
உங்களைப்பெற்றவர்கள்
உங்களின் சோதரங்கள்,உறவினர்கள்
தோழர்கள், ஊர்மக்கள் எல்லோரும்
நவம்பர் 27ல் நீங்கள் உறங்கும்
துயிலும் இல்லங்களுக்கு வருவோம்
ஆனால்,
விடிவு வந்துவிட்டது என்ற
நல்லசேதி வரும் என்ற
உறுதியான நம்பிக்கையூடன்
அமைதியாக உறங்கிய
உங்கள் கல்லறைகளை
இடித்து நாசப்படுத்திவிட்டனரே
அந்த நரவேட்டையாளர்கள்
உள்ளுக்குள் கூட உங்களை நினைத்து
அழக்கூட உரிமையில்லாத
கொடுங்கோல் ஆட்சிநடக்கும்
நாட்டிலல்லவா நாங்கள் வாழ்கின்றௌம்
எப்படி வருவோம் உங்களிடம்
எங்கே எங்கள் தேசப்புதல்வர்கள் கல்லறைகள்
என்று அழுது அழுது அரற்றுகின்றோம்
எப்படி விளக்கேற்றப் போகின்றோம்
எப்படி மலர்தூவி வணங்கப்போகின்றோம்?
எதுவூமே தெரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை
தவிக்கும் உள்ளங்கள்
வெடித்து அழத்துடிக்கின்றன
நினைவூக்குள் நிலைத்து வாழும் எங்கள்
நேசப்புதல்வர்களே!
உங்களை நினைத்து அழுதற்கு
தடைவிதித்து எக்காளமிடுபவர்களுக்கு
புரியாத ஒன்று உள்ளது -அதுதான்
‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள்
மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’
தடைகள் போட்டு கொடுமைகள் செய்தாலும்
விடுதலை உணர்வை சிதைத்திட முடியாது
மாவீரர் நினைவை அழித்திட முடியாது!
-மந்தாகினி.