தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (08.11.2017) காலை 9.00 மணிக்கு கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கேணல் பரிதி அவர்களின் பெற்றோரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி ஆரம்பமானது .
தொடர்ந்து பகல் 11.00 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தனில் அவரின் கல்லறை மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் பணிமனைப் பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
கேணல் பரிதி அவர்களின் கல்லறையில், கேணல் பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலையினை அணிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.
மக்கள்பேரவை பிரான்சின் உறுப்பினர் திரு.மோகன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையின் போது கேணல் பரிதி அவர்களின் ஆழுமை குறித்தும், அவரது ஒவ்வொரு செயற்பாடும் தேசியப்பற்றுடன் சகலரையும் அரவணைத்து செல்வதாக இருந்ததாகவும், தலைமை ஏற்பவர்கள் ஆழுமை செலுத்துபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது முதலாவது ஆளாக எந்தச் செயற்பாட்டிலும் முன்னின்று செயற்பட்டவர் கேணல் பருதி எனத் தெரிவித்தார்.
இதேவேளை பகல் 15.00 மணிக்கு பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி, தழிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கேட்டு பிரான்சு பாராளுமன்றத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது.