பெல்ஜியத்தில் தஞ்சமடைந்துள்ள சுதந்திரப் பிரகடனம் செய்த கட்டலோனிய தலைவர் கார்லெஸ் புகிடமென்ட் உள்ளிட்ட 4 கட்டலோனிய முன்னாள் தலைவர்களுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (2) அன்று இடம்பெற்ற விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் தன்னாட்சிப்பிராந்தியமாக செயல்பட்டு வந்த கட்டலோனியா அண்மையில் தனது சுதந்திரம் தொடர்பான கோரிக்கையை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஸ்பெயினின் எதிர்ப்புக்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு மத்தியில் கடந்த முதலாம் திகதி தனி நாடு தொடர்பான வாக்கெடுப்பை கட்டலோனியா அரசு நடத்தியிருந்தது.
குறித்த வாக்கெடுப்பில் 90 சதவீதமான மக்கள் தனிநாடு தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த போதிலும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என தெரிவித்த ஸ்பெயின் அரசாங்கம் வாக்கெடுப்பின் முடிவுகளை நிராகரித்திருந்தது.
இதையடுத்து கட்டலோனியாவின் நாடாளுமன்றத்தை கலைத்த ஸ்பெயின், கட்டலோனியாவை தனது நேரடி ஆட்சியின் கீழ் செயற்படும் மாநிலமாக பிரகடனப் படுத்தியது.
ஸ்பெயினின் இந்த அறிவிப்பிற்கு கட்டலோனிய தலைவர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
கட்டலோனிய தலைவர் கார்லெஸ் உட்பட 13 பேர்களுக்கு ஸ்பெய்ன் நீதிமன்றம் அழைப்பாணையை வழங்கியிருந்ததுடன், கடந்த வியாழக்கிழமை மட்ரிட் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விசாரணைகளக்கு 9 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்தனர் , இவர்களுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் தேச துரோகம் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனையை விதித்தது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின் போது கார்லெஸ் உட்பட 4 பேர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. குறித்த 4 பேரிற்கும் ஸ்பெயின் நீதிமன்றம் பிடியாணையை வழங்கியுள்ளதுடன், குறித்த 4 பேர் மீதும் புரட்சி, தேசத்துரோகம், பொதுமக்களின் பணத்தை கட்டலோனியா சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.