அரசாங்கம் நடத்தவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இதனை நம்புவதில் பலனில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றது போன்று உண்மைகளைக் கண்டறிந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட உள்ளக விசாரணை என அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறியிருக்கிறார்.
வெளிவிவகார அமைச்சரோ உள்ளக விசாரணை என கூறியிருக்கிறார் இதில் எது சரியானது என்பது எமக்குத் தெரியாது. இருப்பினும் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட்டால் அது நீதியானதும் நியாயமானதுமாக இருக்கும் என்று கூறமுடியாது. இராணுவத்தை காட்டிக் கொடுக்க மாட்டோம். மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் யாரையும் காட்டிக்கொடுக்குமாறு கூறவில்லை.
ஆனால் நியாயமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டால் இவர்கள் குற்றவாளிகலாகலாம் என்பதையே கூறுகிறோம்.
இதனாலேயே நாம் ஐ. நா. ஊடக விசாரணை அறிக்கையை கொண்டுவந்தோம். அதுவும் இப்போது செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு கூறுவது போன்று உள்ளக விசாரணைகள் நடாத்துவதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுடன் தமிழ் மக்களுக்கு இதனூடாக நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசு நடத்தும் உள்ளக விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்கு ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.