மைத்திரிபால இனப்படுகொலை குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் : திருமாவளன்

0
440

timthumbஇலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன ஈடுபட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்று பல வாரங்கள் கடந்த பின்னரும்கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் திரும்ப பெறப்படவில்லை.

இராணுவத்தை உடனடியாக திரும்ப பெறுவோம் என வாக்குறுதி அளித்துத்தான் தமிழர்களின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இனப்படுகொலை குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

மார்ச் மாதம் 2ஆம் திகதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்கு தள்ளிப்போட இலங்கை செய்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. செப்டெம்பர் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என ஐநா மனித உரிமை ஆணையர் கூறியிருக்கிறார்.

இலங்கை பிரச்சனையில் முன்னாள் ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளையைப் போல தற்போதிருக்கும் ஆணையர் செயல்படுவாரா என்ற நியாயமான சந்தேகம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவை தமது பிடிக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் இந்துமாக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த திட்டமிடுகின்றன.

எனவே நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரிபாலவின் தரப்பு வெற்றிபெற வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் தமிழ் மக்களின் நலனை புறக்கணித்து மைத்திரிபாலவை இந்தியா ஆதரிப்பது புதிராக இருக்கிறது. அப்படி செய்வது இந்துமாக்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் பெருகவே வழிவகுக்கும்.

அது ‘வாணலிக்கு பயந்து அடுப்புக்குள் குதித்த’ கதையாகவே இருக்கும். ‘ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் இராணுவம் திரும்பப்பெறப்பட வேண்டும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் உடனடியாக தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்’ என இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும். மைத்திரிபாலாவுடன் போடப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்களுக்காக தமிழர் உரிமைகளை பலியிட்டுவிடக்கூடாது என இந்திய அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது – என திருமாவளவன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here