பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் சட்டத் திருத்தம் ஒன்றை அறிவித்திருக்கிறது சிறீலங்கா அரசு.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி விடுக்கப்பட்டிருக்கிறது.
உத்தேச புதிய சட்டத்தின்படி தென்பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் கித்துள் மரம் தவிர்ந்த வேறு எந்தவொரு மரத்தில் இருந்தும் கள் சீவுவதோ, எடுப்பதோ, இறக்குவதோ தடை செய்யப்படுகிறது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் வடக்கில் மட்டும் சீவல் தொழிலை நம்பியிருக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ்.செல்வராசா தெரிவித்தார்.
மதுவரித் திருத்தச் சட்ட வரைவு என்ற வகையில் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கித்துள், பனை, தென்னை தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளு சீவுவது, எடுப்பது, இறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இருந்தது.
இப்போது பனை மற்றும் தென்னை மரங்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அது நடைமுறைக்குவரும்.
பனை, தென்னை மரங்களில் இருந்து கள்ளுச் சீவுவதற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட இருக்கின்றமைக்கான காரணம் என்ன என்பது அரசால் தெளிவுபடுத்தப்படவில்லை.
அரசின் இந்த நடவடிக்கை ஓர் இனவாத நடவடிக்கை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
கித்துள் மரங்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே, குறிப்பாகச் சிங்கள மக்கள் வாழும் இடங்களிலேயே இருக்கின்றன.
பனை, தென்னை மரங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலேயே அதிகம் இருக்கின்றன.
இதனால் இந்த நடவடிக்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதற்காகத் திட்டமிட்டு அரசு மேற்கொள்ளும் ஒரு செயல் என்று விமர்சிப்பவர்கள் கூறுகின்றார்கள்.
‘‘வடக்கில் பனை, தென்னை மரங்களில் இருந்தே காலம் காலமாக கள்ளு உற்பத்தி செய்கிறோம். இதனை நம்பி 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது இந்தக் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும். எனவே இது குறித்து பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களை அழைத்து ஆராயவுள்ளோம்’’ என்று உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார் எஸ்.செல்வராசா.
இந்தப் பிரச்சினை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அவர்களைக் குரல் கொடுக்கக் கோரப்போகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் மூலம் சீவல் தொழிலாளிகள் மட்டும்ல்லாது பனை ம் கள்ளில் இருந்து உற்பத்தியாகும் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் படும் பனைவெல்லம் உறபத்தி முற்றாக இல்லாமல் போய்விடும். இதனால் பனம் சீனி, கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப் படுகின்றனர்.
தமிழர் பகுதியில் சிங்களம் மேற்கொள்ளும் நவீன பொருளாதார தடையாகவே இந்தச் சட்டம் பார்க்கப் படுகின்றது.