சிறீலங்கா இந்திய கூட்டுச்சதியால் பலாலியில் வீரகாவியமாகி திரூவில் தீயில் சங்கமமாகிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான லெப்.கேணல் புலேந்திரன், லெப்.கேணல் குமரப்பா மற்றும் பாரிசு மண்ணில் வீரகாவியமான விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் உட்பட ஓக்டோபர் மாதத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிறியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, இவிறி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நேற்று (28) இடம் பெற்றது.
பொதுச்சுடரினை இவிறி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு தவராசா ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து கப்டன் கஜனின் சகோதரர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தைத் தெரிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களால் சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.
அரங்கநிகழ்வுகளாக நொய்சிலி குறோண்ட் தமிழ்ச்சோலை மாணவிகள், சோதியா கலைக்கல்லூரி மணவிகள், சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவிகள், இவிறி தமிழ்சோலை மாணவிகள் பங்கு பற்றிய எழுச்சி நடனங்களும், இவிறி தமிழ்ச்சோலை மாணவியின் கவிதையும் இடம் பெற்றது.
சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினர் திரு பொ.பாலசுந்தரம் ஆற்றினார். அவர் தனதுரையின் போது இவிறி தமிழ்சங்கம் தமது தமிழ்ச் சோலை மாணவர்களை இந்நிகழ்வில் பங்குபற்றவைத்தது எமது வருங்காலச் சந்ததியினர் இந்நிகழ்வு பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்தது என்று தெரிவித்தார்.
சமாதான வேடம் இட்டு வந்த இந்தியப் படையினரை மாலைமரியாதையுடன் வரவேற்ற எமது மக்கள் இரண்டு மாதத்திற்குள் அவர்களின் உண்மை நோக்கத்தை புரிந்தனர் என்றும், மூத்த தளபதிகளான லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா உட்பட 12 வேங்கைகள் நஞ்சருந்தி வீரமரணம் அடைந்தார்கள் என்றும், லெப்.கேணல் திலீபன், அன்னை பூபதி மற்றும் கேணல் கிட்டுவையும் இந்திய சதியால் இழந்தோம் என்றும் தெரிவித்த அவர்.
நேற்றைய தினம் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து செல்வதாக கத்தலோனிய எடுத்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் நாட்டு தலைவர் நேற்றை தினத்தை தாம் துக்க நாளாக பார்ப்பதாக தெரிவித்தார்.ஏனெனில் தன்னுடைய நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவதை அவருக்குரிய பொருளாதார நலன் கருதி அதனை அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்தநாடு சுதந்திரமாக பிரகடனப்படுத்தப் பட்டாலும் இன்னும் அங்கு போராட்டம் தொடரவேண்டும் என்பதைத்தான் அது கோடிட்டு காட்டுகிறது. அந்த நாடு அமைக்கப்படும் போது அந்நாட்டால் அரசியல் யாப்பு வரையப்படும் போது அங்கு முரண்பாடு ஏற்பட வாய்புக்கள் இருக்கின்றது. இப்படியாகத்தான் இந்த சுதந்திரங்கள் உருவாகின்றது. எங்களுடைய நாட்டின் சுதந்திரத்தை நாங்கள்தான் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றோம் எங்களது போராட்டம் 65 வருடங்களைத் தாண்டி வருகின்றது இது இன்னும் தொடரத்தான் போகின்றது. இந்தப் போராட்டம் இன்று நாளையுடன் முடியும் போராட்டமாக பார்க்க முடியாது. இன்று சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் தமிழர்களின் உரிமைககள் கொடுக்கப்படாது அவர்கள் நசுக்கப்பட வேண்டும் என்பதையே அங்கு நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. பொதுமக்களின் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஊடாக அறிந்திருப்பீர்கள். அவற்றை வெற்றி கொள்வதாயின் அவர்களுக்கு வலுச்சோர்க்கும் போராட்டங்களையும் அழுத்தங்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதற்காகவே நாம் தொடர் போராட்டங்களை நடத்துகின்றோம். இவற்றிற்கான தீர்வு தமிழீழம் தான் என்பதை எண்ணிக் கொண்டு அதற்கான செயற்பாடுகளை மேற்கொள் வேண்டும் என திரு பாலசுந்தரம் மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன .
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு ஊடகப்பிரிவு.