யாழில் பாதுகாப்பற்ற கடவையைக் கடக்க முயன்ற மாணவன் தொடருந்து மோதி படுகாயம்!

0
193

யாழ்.  பிறவுண் வீதி, முதலாம் குறுக்கு வீதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற மாணவன் ஒருவரை தொடருந்து மோதித் தள்ளியதில் படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   காங்கேசன்துறை நோக்கி நேற்று மாலை 6.30 மணிக்குச் சென்று கொண்டிருந்த  தொடருந்து  மோதியதிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்.இந்துக் கல்லூரியின் தொழில்நுட்பத்துறை உயர்தர மாணவனான, கோப்பாயைச் சேர்ந்த வரதராஜன் குகப்பிரியன் (வயது 16) என்பவரே படுகாயமடைந்தவராவார். படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவனை மோதிய தொடருந்து குறித்த இடத்தில் நிற்காமல் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடருந்து தண்டாவாளத்துக்குக் குறுக்கே மின்கம்பங்களை போட்டும் துணிகளைக் கட்டியும் மீண்டும் தொடருந்து அந்த வழியாகப் பயணம் செய்யமுடியாதவாறு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.   இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து  பொலிஸாருக்கு தகவல்  வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும்  ஏ.எஸ்.பி  ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன்  கடவை அமைத்து தருவதற்கு தாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும்  அதனை ஏற்காத மக்கள்  தங்களுக்கு உறுதியான தீர்வு அவசியம் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து ரயில்  நிலைய பொறுப்பதிகாரியுடன்  தொடர்பு கொண்ட பொலிஸார் நாளை முதல் குறித்த கடவையில் காவலர்கள் இருவர் கடமையில் இருப்பர் என்று உறுதியளித்தார். அத்துடன் நிரந்தர கடவை ஒன்றினை அமைப்பதற்கும் விரைவில்  நடவடிக்கை எடுப்பதாகவும்  தெரிவித்தார்.  இந்த உறுதிமொழியை அடுத்து, தடைகளை அகற்றப்பட்டு குறித்த பகுதி  சுமுக நிலைக்கும் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வன்மைப் போட்டி இன்று  இடம்பெறவிருந்த நிலையில், மறுஅறிவித்தல் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரான குகதாசன் குகப்பிரியன், யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இன்று  நடைபெறவிருந்த மெய்வன்மை போட்டியை மறு அறிவித்தல் வரையில் ஒத்தி வைத்ததாகப் பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

jaffna_train_acci_002 jaffna_train_acci_003 jaffna_train_acci_004 jaffna_train_acci_008

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here