பாரிசில் 26.10.1996 அன்று படுகொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் 21 ஆண்டு வணக்க நிகழ்வு இம் மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ள ஒபர்வில்லியே பன்தன் துயிலும் இல்லத்தில் இன்று (26) பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.
பொதுச் சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் ஏற்றிவைத்தார்.
மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை கப்டன் கஜனின் சகோதரர்கள் அணிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.
சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் ஆற்றினார், அவர் தனதுரையில் சர்வதேச நிதிப்பொறுப்பாளராக இருந்து லெப்.கேணல் நாதன் ஆற்றிய பங்குகள் குறித்தும், கவிதை, இசை, நாடகம், ஆகிய துறைகளில் இருந்து ஈழமுரசின் பத்திரிகை ஆசிரியராக பரணமித்த கப்படன் கஜனின் செயற்பாடு குறித்தும் விபரித்தார்.
தாயகவிடுதலையை நேசித்த இம் மாவீரர்களின் இலட்சிய பற்றை நாமும் தொடர இன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்த திரு சத்தியதாசன் அவர்கள், இன்று தாயகத்தில் இளையோரின் வாழ்கை எவ்விதம் சீரழிக்கப் படுகின்றது என்பது பற்றியும், சிறீலங்கா அரசால் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறும் நில ஆக்கிரமிப்புக் குறித்தும், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுவது குறித்தும் விபரித்தார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு