மக்களின் வீதிமறியல் போராட்டத்தால் நில ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டது.!

0
368

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் சிறீலங்கா கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கப்பட இருப்பதாக அறிவித்தல் வந்த நிலையில், இன்றையதினம் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. இதனை அறிந்த மக்கள் குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் (எ35) பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடான போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தடைப்பட்டிருந்தது.
அதனை அடுத்து, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வீதிமறியலை கைவிடுமாறு கோரிய போதும் மக்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இன்று நடைபெற இருந்த குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பான அளவீட்டு பணிகள் நடைபெறமாட்டாது என தெரிவித்ததோடு உரியவர்களுக்கு காணி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் தெரிவிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் மக்களால் கைவிடப்பட்டது.
இறுதி யுத்தத்துக்கு பின்னர் குறித்த கடற்படை முகாம் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டதோடு கடற்படைமுகாம் நவீன வடிவில் பாரிய படைத்தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடற்படைத்தளத்துக்கு நிரந்தரமாக காணி சுவீகரிப்பு நடைபெற பல முறை அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here