தமிழ் அரசியற் கைதிகள் மூவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன என கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் நாளை 23ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பேரணி தொடர்பில் கிழக்குப் பல்கலைகழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியற் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.
இதன் செயற்பாடாக வவுனியாவில் இருந்த தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தமிழ் அரசியற் கைதிகள் மூவரும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்கள் தொடர்பாக அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. இதனைக் கண்டித்தும், தமிழ் அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணியளவில் கிழக்குப் பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து செங்கலடி பதுளை வீதி சந்தி வரையிலான கண்டனப் பேரணி ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றோம்.
எனவே இப்பேரணிக்கு உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.