நைஜீரிய எல்லையில் இருக்கும் நைகர் நாட்டு கிராமம் ஒன்றில் இறுதிச்சடங்கின்போது தவறுதலாக இடம்பெற்ற வான் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
போகோ ஹராம் ஆயுதக் குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போர் விமானங்களே தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரு விமானம் மூன்று குண்டுகளை வீசிவிட்டுச் சென்றதாக தாக்குதலுக்கு இலக்கான அபதாமின் துணை மேயர் தெரிவித்துள்ளார். உள்ளுர் தலைவர் ஒருவரின் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தவர்கள் மீது ஒரு குண்டு விழுந்தது. இந்த தாக்குதலில் அங்குள்ள பள்ளிவாசலும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த வான் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், தாங்கள் காரணமல்ல என நைஜPரியா தெரிவித்துள்ளது.”இம்மாதிரி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக எங்கள் ஆட் களிடமிருந்து எந்தத் தகவலும் எனக்குத் தெரிய வரவில்லை” என நைஜீரிய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் தெலே அலோங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராமுக்கு எதிரான நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளது. போகோ ஹராம் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நைஜர், சத், கெமரூன் ஆகிய நாடுகள் நைஜீரியாவுடன் இரா ணுவக் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.