பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உறுதியான துப்பு கிடைத்துள்ளதாகவும் கொலையை நடத்தியது யார் என்று கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த மேலதிக தகவல்களைக் கூற மறுத்துவிட்ட ரெட்டி, அது வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவில், 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி உள்ளன. அவர்கள் தலை கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உளவுப் பிரிவு ஐஜிபி பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழுவில் 21 பேர் உள்ளனர். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கெனவே கர்நாடக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .