தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் , கேணல் சங்கரின் 16 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் நேற்று (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணிக்கு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பூங்காவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி இடம்பெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பின் இணைப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். பிரெஞ்சுக்கொடியை ஆர்ஜொந்தை முன்னாள் நகரபிதா பிலிப் ஜோசே ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனை துணைப்பொறுப்பாளர் வல்லிபுரம் பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மன்னார் மாவட்ட முன்னாள் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க தொடர்ந்து கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ராதாவான்காப்புப் படையணிச் சேர்ந்த லெப்.கேணல் உருத்திரன் மற்றும் லெப். மாவேந்தன் ஆகியோரின் சகோதரர் ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தை, நாட்டுப்பற்றாளர் திரு.ஜெயசோதி அவர்களின் துணைவியார் திருமதி கலா, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி பவளராணி மாணிக்கராஜா ஆகியோர் செய்துவைக்க அகவணக்கம் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆரம்பநிகழ்வாக ஆசிரியர் திரு.எஸ்.கிருபாபரணன் அவர்களின் ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் இசைவிளக்கம் இடம்பெற்றது.
ஆர்ஜொந்தே தமிழ்ச்சோலை, இவ்றி தமிழ்ச்சோலை, கொலம்பஸ் தமிழ்ச்சோலை, வால்து ஈரோப் தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள், தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வரலாற்று உரை, கவிதை, ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பின் இணைப்பாளர் திரு.நிதர்சன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் நவநீதன் நிந்துலன் ஆகியோரின் பிரெஞ்சுமொழி உரைகள் என்பன இடம்பெற்றதுடன் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் இனமான இயக்குநர் திரு.வ.கௌதமன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அவர்தனது உரையில், வானத்தில் இருந்து திலீபன் சொல்கின்றான் போரை விடாதே மானத்தை இழந்துதான் மாற்றான் காலை நீ தொடாதே….! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தீநகரில் ஒரு மழைநாள் இரவில் இந்தப்பாடலுக்கான வேலையை எங்கள் குழு செய்தது.
நான் முன்னின்று அதைச்செய்தேன். அதைமுடித்துவிட்டு பெருமழையில் நான்போகும்போது எனது உந்துருளியில் முக்கால்வாசி வெள்ளம். அந்த நடு இரவில் ஒருவன் ஓடிவந்து போகாதீங்கள் மின்சாரக் கம்பி அறுந்து கிடக்கின்றது. ஒருத்தன் செத்துக்கிடக்கின்றான். திரும்பி வேறு வழியில் போனோம். அந்தப்பாடல் இன்று உலகம்முழுக்க எங்கள் இளைய தலைமுறையை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. அந்தப்பாடலின் வரி நான் உட்பட ஒவ்வொரு தமிழனதும் சாசனம் ஆகவேண்டும். நெஞ்சிலே இருத்தி நிறுத்திவைக்கப்படவேண்டிய வரிகள். இன்று என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வளர்ப்பில் உருவான என் உயிருக்கு நிகரான என் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். என அவரது உணர்வுமிக்க உரை மெய்சிலிர்க்கத் தொடர்ந்தது.
தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவையொட்டிய தியாக வேள்வியில் திலீப ஒளி என்னும் இறுவெட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. இனமான இயக்குநர் திரு. வ.கௌதமன் அவர்கள் முதல் இறுவெட்டை வெளியிட்டுவைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. பொன்மலை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நிறைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)