மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் மற்றும் ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதன் விளைவாக அண்டைநாடான வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் படகுகளின் மூலம் செல்பவர்களின் எண்ணிகை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், வங்காள தேசத்துக்கு தஞ்சமடைய ரோஹிங்கியா இனத்தவர்கள் சென்ற இரு படகுகள் நேற்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் 23 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 40-க்கும் அதிகமான பிரேதங்களை மீட்கும் முயற்சியில் நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வங்காளதேசம் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.