வடக்கு மாகாணத்தின் சுற்றுலா நடவடிக்கைகள், சுற்று லாத்துறையுடன் தொடர்பில்லாக பாதுகாப்புத் தரப்புக்கள் மற்றும் வெளியில் இருந்து வந்துள்ள தனியார் எனப் பலரின் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது சுற்றுலா வருமானங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அல்லது வேறு பிரிவி னருக்கு மேலதிக வருமானமாகப் போய்ச் சேரும் நிலை யே காணப்படுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் சுற்றுலா மாநாடு குறித்து முதல்வர் அனுப்பி வைத்த அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக் கூடிய மணற்பாங்கான பல கடற் கரைகள், சுற்றுலா மையங்கள் கவனிப்பார் அற்று புதர் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுலாத் துறையை முறையாகச் சீரமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய மீள் கட்டுமானங்களுடன் சுற்றுலா மையங்களை மீள் பொலிவுறச் செய்வதன் மூலம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வருமானத்தை உயர்த்துவதுடன் அதனோடிணைந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யலாம்.
உப தயாரிப்புக்களான உணவு வகைகள், உள்ளூர் இனிப்பு வகைகள் மற்றும் வடபகுதிக்கே உரித்தான ஒடியல், பனாட்டு போன்ற பனை உற்பத்திகள் ஆகியவற்றுக்கு நல்ல கிராய்க்கி ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. எமது கடலுணவுகள் அவற்றின் சுவையின் நிமித்தம் பிரசித்தி பெற்றுள்ளன. வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த 3 ஆண்டு களில் சுற்றுலா தொடர்பான பல வேலைத் திட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்னெடுத்திருக்கின் றோம்.
எனினும் இத் துறையை சீராக முறையான தந்திரோபாயத் திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதிப் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினை யாக எம்மிடையே காணப்படுகின்றது.
எமது பிராந்தியத்தில் இருக்கும் மரபுரிமைப் பொருள்கள் பல சூறையாடப்பட்டு வருகின்றன. கோயிற் சிலைகள் காணாமல் போவதை வெறும் களவு என்று கொள்ள முடியாதிருக்கின்றது.இச் சிலைகள் கடத்தப்பட்டு பல கோடி ரூபாய்களுக்குக் களவாக விற்கப்பட்டு வருகின்றன. எனவே எமது கோயில் சொத்துக்கள், சிலைகள், மரபுரிமைப் பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான சட்ட திட்டங்களை இயற்றி வருகின்றோம்.
பலாலி விமானத் தளம், காங்கேசன்துறை கடற்படைத்தளம் ஆகியன சுற்றுலாவின் பொருட்டு சீரமைக்கப்பட்டு அத னூடாக வான், கடல் வழிப் போக்குவரத்து திறக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்து அது சம்பந்தமாகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
கொழும்பு அரசின் உதவியுடன் எமக்குத் தெரியாமல் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அவதானமாக இருத்தல் அவசியம். எனவேதான் எமது பகுதிகளின் பாரம்பரியத்துக்கும் சூழலுக்கும் கலை கலாசாரத்துக்கும் ஏற்றவாறு புதிய சுற்றுலாக் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக்கான நோக்குகள் பற்றிய ஆவணம் உறுதுணையாக நிற்குமென நம்புகின்றோம் என்றார்.