ரோஹிங்யா மக்களை இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் தங்க வைப்பதற்கு அனுமதி வழங்குமானால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வடமாகாண சபை வழங்கும் என்று வடக்கு மாகாணசபையில் நேற்று தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர் பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் 106 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில் மியன்மாரிலிருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் கல்கிசைப் பொலிஸ் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சில இனவாத பிக்குகள் தலைமையிலான குழுவினர் அவர்களை நாடு கடத்துமாறு கோரி துவேசமாக நடந்துகொண்டனர். இந்நிலையில் அந்த அகதிகள் தற்சமயம் பூசாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத்தேடி வந்த இவர்கள் விடயத்தில் குறித்த குழுவினர் நடந்துகொண்டவிதம் கண்டிக்கத் தக்கது. குறித்த மக்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். அந்த மக்களை இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் தங்கவைப்பதற்காக அனுமதி வழங்குமானால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வடமாகாணசபை வழங்கும். இம் மக்கள் மீதான இனவாதம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்தார். இக் கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.