குர்திஸ்தான் சுதந்திர நாடு கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது.
ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், குர்திஸ்தான் பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரி கடந்த திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சுதந்திரத்திற்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கலாம் என கூறப்பட்டது. ஈராக் அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 92 சதவீத மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அந்த வாக்கெடுப்பை நடத்திய குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள், தனி நாடு தொடர்பான பேச்சைத் தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் என அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.