சிறீலங்கா அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வித்தியா வழக்கில் சுவிஸ் குமார் விடயத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் தெரிவித்துள்ள நிலையில் அவரது அமைச்சு பதவிக்கு ஆபத்து வரலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்பட்டது. நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தனித் தீர்ப்பின் சுருக்கத்தை வாசித்தபோது சிறீலங்கா அமைச்சர் விஜயகலாவின் செயலை விமர்சித்துள்ளார்.
வித்யா படுகொலை செய்யப்பட்டபின்னர் ஊர்ப் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுவிஸ்குமார் மின்சாரக் கம்பம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அங்கு வந்திருந்த விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரை பொதுமக்களிடத்திலிருந்து விடுவிக்க முயன்றார்.
அமைச்சர் விஜயகலா சுவிஸ்குமாரைக் காப்பாற்றி அவர் வெள்ளவத்தைக்கு தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலமும் பெறப்பட்டிருந்தது.
சுவிஸ் குமாரைத் தப்பபிக்க உதவியவர்கள் தொடர்பான பிறிதொரு வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.