இந்திய பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் முன்பு தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள இந்த இரண்டாவது கட்ட போராட்டம் இன்று 74வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் இன்று () இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாலையில் படுத்து அவர்கள் உருண்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி நெருக்கடி அளித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த விவசாயிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.