சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த அரசுத்தலைவர் தேர்தலின் பின்னர், ஈழத்தமிழரின் இன்றைய நிலை குறித்து ஆராயும் பொருட்டு பிரான்சுநாடாளுமன்றத்தில் சிறப்புக் கலந்தாய்வு நேற்று 18-02-2015 புதன்கிழமை இடம்பெற்றது.
பிரான்சு வாழ் தமிழ் மக்களிற்கான நாடாளுமன்ற ஆய்வுக் குழுவின் ஏற்பாட்டில், தலைவர் மரி ஜோர்ஜ் பூபே (Mme Marie George Buffet) அவர்களின் வழி நடத்துதலில் சிறப்புற இந்தக் கலந்தாய்வு மன்றம் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தமிழர் தாயகத்திலிருந்து வடமாகாண சபை உறுப்பினரும், சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். மொறிசியஸ் நாட்டிலிருந்து மகாத்மா காந்தி கல்விமையத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் திரு.அருணாச்சலம் அவர்களும் வருகை தந்திருந்தார். ஊடகவியலாளர் ரோகித பஸானாமற்றும் பிரான்சு சட்டவல்லுனர் தியெறி யாக்மென் ஆகியோரும் பங்கேற்பாளாராகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள், மாணவர் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், ஐரோப்பிய தமிழர் ஒன்றியம், பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மனிதவுரிமைகளுக்காகக் குரல்கொடுப்போர், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான தீர்மானம், ஐநா மனிதவுரிமைகள் அவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இந்த கலந்தாய்வுக்கான ஆவணப்படுத்தல், பவர்பாயிண்ட் மூலமாக 1948 முதல் இன்று வரை தமிழர் வாழ்வை விபராமாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் சபையினருக்கு எடுத்துக்காட்டினர்.
மொறிசியஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த மொழியியல்துறை வல்லுனர் திரு.அருணாச்சலம், மொறிசியஸ் நாடு மிகவும் சிறிய நாடாக இருக்கின்ற போதும், இந்தியாபோன்ற சக்திவாய்ந்த நாடுகளின் அழுத்தங்களையும் மீறி, 1985யில் மௌரிசியஸ் நாட்டு பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் இலங்கை தமிழர்களின் வாழ்வியல் உரிமைக்கான விடயத்தை இட்டு பேசியதையும், இலங்கையில் இடம் பெற்ற பொது நலவாய நாடுகளின் மாநாட்டினைப் புறக்கணித்ததையும், ஐநா மனிவுரிமைகள் அவையில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்த தீர்மானம் நிறைவேற்ற சிறப்பாகக் பங்காற்றியதைக்குறிப்பிட்டு அந்நாட்டினை முன் மாதிரியாக்கொண்டு பிரான்சு நாடும் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு.சிவாஜிலிங்கம் தனதுரையில், இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழர்கள் திட்டமிட்டமுறையில் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை சான்றாதாரங்களோடு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். இவரது உரைபார்வையாளர்களிடம் முக்கிய கவனத்தைப் பெற்றது.
திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் மேலும் தனது உரையில் பேசும் போது, இப்போது சிறிலங்காவில் நிலவும் அமைதி என்பது வெறும் மயான
அமைதி என்பதும், மனிதவுரிமை சபையின் விசாரணைக்குழு சிறிலங்காவிற்கு சுதந்திரமாக தமது விசாரணை நடாத்த ஐக்கியநாடுகள் சபை நடைமுறை படுத்துவதோடுவட மாகாண சபை வெளியிட்டபிரேரணையின் அடிப்படையில் இனப்படுகொலைக்கான விசாரணை நடை பெறவேண்டும் என்பதை தாம் எதிர்பார்பதாகவும், இதற்கு பிரான்சு அரசும், ஐரோப்பியஒன்றியமும் நடவடிக்கை எடுக்க பிரான்சு பாராளுமன்றதினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன் வைத்தார், அதன் அடிபடையில் வடமாகாணசபை முன்மொழிந்த பிரேரணை, பாராளுமன்ற குழுத்தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
பத்துக்கோடித் தமிழர்கள் உலகளவில் இருந்தும், அவர்கள் நாடற்ற தேசிய இனத்தவர்களாக இருப்பதனால் அவர்களுக்கான உரிமைக்குரலை ஐநா மன்றில் எழுப்பமுடியாத அவல நிலை தொடர்வதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திருச்சோதி அவர்கள் குறிப்பிட்டார்.
உயிரழிப்பை ஏற்படுத்துவது மட்டும் இனவழிப்பு என்று கருதிவிடமுடியாது. ஓர் இனத்தின் நிலங்களை அபகரிப்பதும், அவர்களின் கலாச்சார அடையாளங்களை மொழியினை அழித்தொழிப்பது போன்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளையும் இனவழிப்பாகவே கருதவேண்டும் என்றும் அதன் உச்சக்கட்டநடவடிக்கையே முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனவழிப்பு என்றுஊடகவியலாளர் ரோகித பஸானா தெரிவித்தார்.
ரோஹித பாசன மேலும் பேசும் போது இன்றைய நிலை ஒரு பக்கம் ஐக்கியநாடுகளின் மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் ஆட்சி மாற்றத்தை வைத்து ஒரு எதிர்பார்புடன், மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டிய அறிக்கையை 6 மாதம் பின் தள்ளி இருக்கும் நிலையில், வட மாகாண சபை சிறிலங்காவில் 1948யில் இருந்து இன்று வரை தமிழ் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும், ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபை இனப்படுகொலைக்கான விசாரணையை முன்னகர்த்தவேண்டும்
என்று வேண்டியிருப்பதை இரண்டு விதமான சூழலை காட்டி இரண்டுவித்தியாசமான சூழலில் நிற்பதாக விளக்கினார், இந்த சூழலில் தமிழர் பிரச்சனையை சர்வதேச மட்டத்தில் முக்கிய விடயமாக வைத்திருக்க வேண்டியது மனிதவுரிமை செயல்பாட்டாளர்களின் கடமை என்பதை அவர் வலியுறுத்தினார்.
எத்தனை ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் தமிழர்களுக்கு இலங்கையில் சரியான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை பல வித உதாரணங்களைமுன்வைத்து வழக்கறிஜர் தியெறி யாக்மென் வலியுறுத்தினார். பாராளுமன்ற குழு பல தடவை கூடி தமிழர் பிரச்சனைகள் பற்றி பல விதமான ஆய்வுகளை இதுவரை செய்து இருப்பதாகவும், ஆனால் இன்றைய சந்திப்பு ஊடாக தாம் மேலும் பல விடயங்களை அறிந்தும் புரிந்தும் கொள்ளக் கூடியதாக இருந்ததாகவும், தமிழர்களுக்கு நீதியான, நிலையான அரசியல் தீர்வு தேவை என்பதையும் அதற்குரிய அரசியல் செயல்பாடுகளில் தமது பாராளுமன்ற குழு செயல்படும் என்பதை அவர் உறுதி அளித்தார். அத்துடன் வட மாகாண சபையின் பிரேரணையை முன்னகர்த்த தனது தலைமையில் இருக்கும் இக்குழு செயல்படும் என்பதையும் கூறினார்.
தமிழர்கள் தங்கள் தேசியத்தைக் கட்டியெழுப்பிடவும், பாதுகாப்பதற்கும் தொடர்ந்தும் தங்களது உறுதியான பங்களிப்பினை வழங்குவோம் என நிறைவாகக் கருத்துரைத்த மரி ஜோர்ஜ் பூபே அவர்கள் குறிப்பிட்டார்.