தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழ் மக்களது விடுதலைக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும் என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்த திலீபன், 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் எதுவுமின்றி தமிழ் மக்களது விடிவுக்காய் தனது உயிரை ஈகம் செய்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவாக இன்று கைதடி பிள்ளையார் கோவிலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.
தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அவர் தியாக வரலாறு படைத்த நினைவிடமருகே சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந் நிலையிலேயே தமிழரின் பண்பாட்டுப் பெறுமானங்களில் ஒன்றான காவடி எடுத்தல் நிகழ்வை தாயகப் பற்றாளர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை தியாகி திலீபனது 30 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் இடம்பெற்றது.
உள்ளூர் நேரப்படி தியாகி திலீபன் வீரச்சாவடைந்த 10.10 அளவில் ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்!
தியாக தீபம் திலீபனின் முப்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான சுற்றுவட்டத்தில் திலீபனின் திரு உருவப்படம் வைத்த பந்தலில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பல்கலைக்கழக சமூகமே அணிதிரண்டு பார்த்தீபனை நினைவேந்தியது.
தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன் ஈகைச் சுடரினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோரால் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.