மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து நாற்பது தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நேற்று முன்னெடுத்திருந்தன.
இவ் வேலைநிறுத்தத்தினால் நாட்டின் வைத்தியசாலைகள், பாடசாலைகள், சுகாதார சேவை நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கியதுடன் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்து இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார சேவையினை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேர ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டது.
இதற்கு ஆதரவாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம், பல்கலைகழக பேராசிரியர்கள் சங்கம், அதிபர் சேவைகள் சங்கம், ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், பல் மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட நாற்பது தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதித்திருந்தன.
வைத்தியர்களின் வேலை நிறுத்தத்தால்
நோயாளர்கள் அவதி
நேற்று காலை முதல் வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்த்தம்பிதமடைந்திருந்தது. இதனால் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சிக்காக வருகைத்தந்திருந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் பல மணிநேரங்களாக காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. வைத்தியசாலை வளாகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டும் சைட்டம் எதிர்ப்பு பதாகைகளும் தொங்கவிடப்பட்டும் காணப்பட்டன.
இதன்போது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்தே இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றன. எப்போது எவர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றார்கள் என்றே தெரிவதில்லை. எனது மகளுக்கு கடுமையான சுகயீனமாக இருக்கின்றது. காலை 6 மணியிலிருந்து நீண்ட வரிசையில் பல மணிநேரங்களாக காத்திருக்கின்றோம். இதுவரையில் வைத்தியர்கள் சிகிச்சையளிக்க வரவில்லை.
பொறுப்புவாய்ந்த வைத்தியர்களே பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்வதை ஏற்க முடியாது என சிகிச்சைக்காக வந்திருந்தவரொருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மற்றுமொரு நோயாளர் குறிப்பிடுகையில், நாட்டில் ஜனநாயக உரிமை அளவு கடந்து வழங்கப்பட்டுவிட்டது. அதனால்தான் போராட்டங்கள் அதிகரித்துவிட்டன என தனது ஆதங்கங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகபேச்சாளர் ஹரித்த அழுத்கே தெரிவிக்கையில்,
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைச்செய்யக்கோரி கடந்த காலம் முதல் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
அதற்காக இதேபோன்று பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தபோதிலும் இன்னும் அதற்கான தீர்வொன்றை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்கினையே கையாண்டுவருகின்றது. சிலரின் அரசியல் தேவைக்காக இந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கும் இலங்கை வைத்திய சபையின் சுயாதீனத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கும் நாம் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம். ஆகவே உடனடியாக அரசாங்கம் இதற்கு பதில் வழங்காவிடில் எமது போராட்டம் தீவிரமடையும் என்றார்.
எனினும் வைத்தியசாலைகளின் புற்றுநோயாளர் பிரிவு, சிறுவர், மகளிர், குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை மையம் என்பனவற்றின் சேவைகள் தொடர்ந்தும் வழமைப்போல் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில், பல்கலைகழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்களில் ஒருபகுதியினர் நேற்று பாடசாலைகளுக்கு சமூகம் தந்திருக்கவில்லை. எனவே பாடசாலை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெ ளியேறியும் இருந்தனர். இதனால் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்திருந்தன.
அதேபோல் பல்கலைகழகங்களிலும் பேராசியர்கள் மேற்கொண்டிருந்த பணிபகிஷ்கரிப்பினால் நேற்றையதினம் விரிவுரைகள் ரத்து செய்யபட்டிருந்ததுடன் பல்கலைகழக வளாகங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிட்டு கடும் எதிர்ப்பு வெ ளிக்காட்டப்பட்டது.
இதேவேளை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிடுகையில்,
மாலபே தனியார் பல்கலைகழக விவகாரத்தில் அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் முன்வைக்காதுள்ளது. தொடர்ந்தும் அரசாங்கம் மௌனம் சாதிப்பதால் இதற்கு மறைமுகமான ஆதரவை வழங்குகின்றேதோ என்ற சந்தேகம் நிலவுகின்றது. இந்த தனியார் மருத்துவ பல்கலைகழகம் அனுமதிக்கப்பட்டால் எமது நாட்டில் இதுவரை நிலவிய இலவச கல்விக்கும் சுகாதார துறைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே இது தொடர்பில் அரசாங்கம் உடடியான தீர்வினை வழங்காவிடில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.