ஐநா உரை:-(19/09/2017)
வ.கௌதமன்
தமிழ்நாடு.
இந்தியா
இந்த பூமிப்பந்தின் தொன்மையான இனங்களில் ஒன்றான பெருமைமிக்க தமிழனத்தின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு தேசிய இனம் தனது வரலாற்று உரிமைகளை மிக வேகமாக இழந்து கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான தேசிய இனங்களின் பொதுமன்றமாக அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் அவையில் எங்களுக்கான நீதியினை வென்றெடுக்க பெரு நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்.
வணக்கம்!
உலகின் கவனமெல்லாம் இந்தியாவின் வடமுனையில் உள்ள காஷ்மீரை நோக்கியே இருக்கிறது. உண்மை என்னவென்றால் இந்தியாவின் தென்முனையும் தனது நிம்மதியை இழந்து நெடுங்காலமாகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடந்த மாநிலமாக எங்கள் தமிழ்நாடு இருந்து வருகிறது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் எங்கள் இனத்தின் பெயர் தமிழர். இன்றும் எங்கள் இனத்தன் பெயர் தமிழர்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மரபினமாக (RACE) இருந்தோம். இன்று தேசிய இனமாக (NATIONALITY) இருக்கிறோம். இதற்கான புதைபொருள் – தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. வரலாற்றில் எங்களுக்கான தமிழ்ப் பேரரசுகள் இருந்தன. பல்லாயிரம் ஆண்டுகள் அவ்வரசுகள் நீடித்தன.
கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு முன்பு (வெள்ளையர்கள்) பிரித்தானியரின் கிழக்கிந்திய கம்பெனி பீரங்கி முனையில் எங்களை கைப்பற்றி “இந்தியா” என்ற நிர்வாகத்தில் எங்களை இணைத்து அடிமைப்படுத்தியது.
இந்தியாவில் காலணிய ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் போர்க் கொடி ஏந்திய இனம் எங்களுடையதுதான். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எங்களுடைய பங்கு மிகப்பெரியது. இந்த மாமன்றத்தின் வளாகத்தில் சிலையாக வைக்கப்பட்டிருப்பவரும், தென்னாப்பிரிக்காவின் வழக்கறிஞராக பணியாற்றியவருமான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியடிகளாக்கிய பெருமை எங்களுக்குண்டு. ஆயினும் சுதந்திர இந்தியா தொடக்க நாள் முதலே எங்களை வஞ்சித்து வருகிறது. சுதந்திரத்திற்காக போராடி அதிகம் செத்தவர்களும் தமிழர்கள். சுதந்திரத்திற்கு பிறகும் அதிகம் பேர் செத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழர்.
எங்கள் மாநிலத்தின் எல்லைகள் சிதைக்கப்பட்டன. எங்கள் தாய்மொழியான தமிழுக்கு இன்றளவும் அதிகாரம் மறுக்கப்படுகிறது. எங்கள் மீது திணிக்கப்படும் வட இந்திய மொழியான இந்தியை எதிர்த்து கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தி மொழி ஒன்றே தமிழ்நாடு உட்பட அனைத்திந்தியாவிற்கும் ஒரே ஆட்சி மொழி என்று இந்திய அரசு கொண்டு வந்ததை எதிர்த்தும் அந்த மொழித் திணிப்பிலிருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும் 1965இல் எங்கள் மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் தீக்குளித்து இறந்தார்கள். எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆளும் அரசுகளின் துப்பாக்கிகளுக்கு பலியானார்கள்.
இந்தியா ஒரு பேரரசு அல்ல. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம். அதுதான் இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு அளித்த உறுதிமொழி. ஆனால் ஆட்சியாளர்கள் அந்த புனிதமான சாசனத்தின் உறுதிமொழியை எங்கள் விடயத்தில் தொடர்ந்து மீறிக்கொண்டேயிருக்கிறார்கள்.
எங்கள் தாய்மொழியான தமிழில் எங்கள் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியாது. ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் வழக்கு நடத்த முடியும் என சட்டம் போட்டுள்ளார்கள். எங்கள் தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழி பாடமே இல்லாத நடுவண் அரசின் பாடத்திட்டங்களைக் கொண்ட ஏராளமான பள்ளிகளை நடுவண் அரசும், நடுவண் அரசின் அனுமதி பெற்று தனியாரும் நடத்துகின்றனர். வளர்ச்சியடைந்த பல மொழிகளையும், பல தேசிய இனங்களையும் கொண்ட இந்தியாவில் ஒரே ஒரு தேசிய இனத்தின் தாய்மொழியான “இந்தி” மட்டுமே ஆட்சிமொழியாக உள்ளதென்பது. ஐநாவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு கூட்டுறவு ஒப்பந்தத்தின் பகுதி-2 (PART-2) உறுப்பு-2 (ARTICLE-2) க்கு எதிரானது.
இந்நிலையில் இந்திய அரசு எங்கள் தமிழ்ப் பிள்ளைகளின் உயர்கல்வி உரிமையையும் பறித்தெடுக்கிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுவரை மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அண்டில் “நீட்” ;” (NEET – National Eligibility and Entrance Test) என்ற இந்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு வழியாக தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையை இந்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. இந்திய அரசின் பாடத்திட்டம் வேறு, தமிழக அரசின் பாடத்திட்டம் வேறு. எங்கள் தமிழ்வழிப் பள்ளியில் படித்து 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்த எங்களின் தமிழ் மாணவி “நீட்” தேர்வில் போதிய மதிப்பெண் வாங்கவில்லை என்று நடுவண் அரசால் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மூட்டைத் தூக்கும் தந்தைக்கு மகளாக பிறந்தவள் தனது லட்சியத்தை அடைய முடியவில்லையே என மனமுடைந்து 1-9-2017 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அனிதா போல் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ-மாணவியர் தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பினை இந்திய அரசு தடுத்துவிட்டது. மருத்துவ படிப்பைத் தொடர்ந்து பொறியியல், சட்டம், கலை, அறிவியல் படிப்பிற்கும் நீட் கொண்டுவந்து எங்கள் மண்ணில் எங்கள் வரிப்பணத்தில் இயங்கும் எங்களின் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களை படிக்க அமர்த்தும் சூழ்ச்சிகளையும் தொடர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது இந்திய மத்திய அரசு. கல்வியையும் பறித்து வேலையையும் அபகரித்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது?
எங்கள் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எங்கள் மக்களின் அனுமதியை பெறாமல் எங்களுடைய எல்லைக்குள் இருந்த கடலோர “கச்சத்தீவை” இலங்கை அரசுக்கு இந்திய அரசு கொடுத்தது. இதனால் மரபுரிமையுடன் மீன் பிடித்து வந்த எங்கள் தமிழ் மீனவர்களை எங்கள் கடல் பகுதியிலேயே எல்லைதாண்டி வந்துவிட்டதாக போலியாக குற்றம்சாட்டி இலங்கை அரசு 600க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இதுவரை சுட்டுக் கொன்றுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தவோ, சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ இந்திய அரசு எந்த முயற்சியிலும் இறங்கவில்லை;.
எங்கள் மீனவர்களை சுட்டுக் கொல்ல மறைமுகமாக இந்திய அரசு துணை போகிறது. ஐநாவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு கூட்டுறவு ஒப்பந்தத்தின் பகுதி-(PART-III) உறுப்பு-6 (ARTICLE-6)க்கு எதிரானதாகும்.
எங்கள் மக்களின் வாழ்வாதாரமாக – பண்பாட்டு வளர்ச்சியின் செவிலித்தாயாக – பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிவந்த காவிரி ஆற்றை, எங்களுக்கு மேல் பகுதியில் உள்ள பக்கத்து மாநிலமான கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் அணைகள் கட்டித் தடுத்துக் கொண்டுவிட்டது. எங்கள் மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டு ஒரு தீர்ப்பாயம் ( TRIBUNAL ) அமைக்கப்பட்டு அதுவும் தீர்ப்பு வழங்கிவிட்டது. அத்தீர்ப்பை செயல்படுத்துமாறு இந்திய அரசுக்கு – இந்தியாவின் இறுதி அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பு வெளியான 2007ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அத்தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் 25 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் சாகுபடியாகும் 12 மாவட்டங்கள் செயற்கை வறட்சியால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு மக்கள் வறுமை கொடுமையிலும் கடன் தொல்லையிலும் துன்புறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல நூறு உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவிரி நீர் பாசனத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் 4 கோடி மக்களுக்கு குடிநீராகவும் உள்ளது.
இதே போன்று முல்லை பெரியாறு, பாலாறு, பவானி போன்ற ஆறுகளில் வரும் எங்களுக்கான உரிமை மறுக்கப்படுவதோடு அதனை மொத்தமாக தடுத்து தங்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே மேலும் மேலும் தடுப்பணைகள் கட்டும் அண்டை மாநில அரசுகளின் மீது நடவடிக்கைகள்கூட எடுக்காமல் தமிழா;களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது எங்களை ஆளும் நடுவண் அரசு. இந்திய அரசின் இச்செயல் ஐநாவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டுக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் பகுதி-1 (PART-1) உறுப்பு-1 (ARTICLE-1) இல் உட்பிரிவு 2-க்கு எதிரானதாகும்.
எங்கள் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாட இந்திய அரசு அனுமதிக்கிறது. வளமான விளைநிலங்களுக்கு இடையே பெட்ரோலியம், எரிவளி எடுப்பதற்காக இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள் போட்டு வேளாண்மையை பாழாக்கி வருகிறது இந்திய அரசு. இதனால் நிரந்தரமாக தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டமான கதிராமங்கலம் பகுதியிலும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், வெள்ளக்குடி, கோவில்களப்பில், கமலாபுரம், அடியக்கமங்கலம், நரிமணம், பணங்குடி, திருநகரி போன்ற பகுதிகளிலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பாசன நீரும், குடிநீரும் இல்லாத நிலையில் உழவர்களும், கிராம மக்களும், நூறு நாட்களை கடந்து, இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்திய அரசு தனது சொந்த லாபத்திற்காக எங்களின் தாயக சுற்றுச்சூழலை கெடுப்பதுடன் வேளாண்மையையும் நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டதோடு மட்டுமல்லாமல் கடலூர், நாகை போன்ற மவாட்டங்களை மேலும் மேலும் பாழக்க துடிக்கிறது.
கடந்த ஓராண்டிற்கு முன்பு செம்மரம் வெட்டிச் சென்றதாக கூறி பேரூந்திலிருந்து இறக்கப்பட்ட 20 தமிழர்களை காட்டிற்குள் கூட்டிச் சென்று கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தியது ஆந்திர அரசு. அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை. இந்திய அரசு பேருக்குக்கூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை. காரணம் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள். செம்மர கடத்தல் எனக்கூறி நித்தம் நித்தம் கைதுகளும், சித்தரவதைகளும் இன்னும்கூட தொடா;ந்து கொண்டே இருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணத்தில் குற்றம்சாட்டபட்டு உறுதியாக நிரூபிக்கப்படாத நிலையிலுங்கூட கடந்த 26 ஆண்டுகளாக ஆயுள் சிறைக்கைதிகளாக இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட எழுவரை இந்திய அரசு இதுவரை விடுதலை செய்ய முன்வரவில்லை. காரணம் அவர்கள் எழுவரும் தமிழர்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்பே செறிவான நகர நாகரீகத்தோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் கொட்டிக் கிடக்கும் கீழடி அகழ்வாய்வினை மத்திய அரசு எப்படியாவது மூடி மறைக்கப் பார்க்கிறது. உறுப்படியாகவும், நேர்மையாகவும் ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர் அமர்நாத் அவர்களை அதிரடியாக மாற்றி அவர்களுக்கு சாதகமான ஒருவரை நியமித்து அறமற்ற செயலில் ஈடுபடுகின்றனர் நடுவண் அரசினர். ஒரே நோக்கம் இந்த பூமிப்பந்தில் ஆதி இனம் தமிழர்கள் என இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது மட்டுமே.
5000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எங்கள் ஏறுதழுவுதல் விளையாட்டு உரிமைக்காக அறவழியில் இந்த உலகமெ வியக்கும்படி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட எங்கள் தமிழினமே ஒரு புள்ளியில் நின்று போராடியபோது எங்களை ஆளும் அதிகார வர்க்கங்கள் பணிந்து எங்களுக்கான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனாலும் கூட நாங்கள் வெற்றியில் திளைத்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் மாணவர்கள், இளைஞர்களை தாக்கிய கொடூர வன்முறை என்றுமே மறக்கமுடியாது. எங்களுடன் போராடிய பெண்கள் மானபங்கம் படுத்தப்பட்டார்கள். இன்றுவரை அதற்கு நீதியில்லை.
தமிழ் மக்களின் உக்கிரமான போராட்டங்களை காலில் போட்டு மிதித்துவிட்டு இந்திய அரசின் பிரதமரும், ரஷ்ய அதிபரும் சந்திக்கும் போதெல்லாம் எங்களின் கூடங்குளம் அணுஉலைகள் கூடிக்கொண்டே போகின்றன.
சிங்கள அதிகார வர்க்கமும், உலக வல்லரசுகள் சிலதும் இணைந்து நின்று எங்கள் தொப்புள்கொடி உறவுகளை ஈழ மக்களை முள்ளிவாய்க்காலில் வைத்து இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுநாளில் மெழுகுவர்த்தி ஏந்தி கடைபிடிக்கும் சடங்கினை செய்தமைக்காக தோழர் திருமுருகன் காந்தி அவர்களையும், இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை தந்து கொண்டிருந்த மாணவி வளர்மதியினையும் நடுவண் அரசின் தூண்டுதலின் பேரில் தமிழக அரசு அவர்களின் மீது திருட்டு, கற்பழிப்பு, கொலை வழக்குகளில் வழங்கப்படும் “குண்டாஸ்” என்கிற கொடிய தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தது அரச பயங்கரவாதம். மீத்தேன் எதிர்ப்புக்காக மக்களோடு போராடிய பேராசிரியர் த.ஜெயராமன் அவர்களையும் சிறையிலடைத்து துன்புறத்தப்பட்டனர். தமிழர் உரிமைக்களத்தில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களோடு நிற்பதற்காக என்னையும் சிறையில் அடைத்தார்கள். பொய் வழக்கு புனைந்து மேலும் மேலும் சிறையிலடைக்க துடிக்கிறார்கள்.
மக்களை காக்கும் அரசுகளாக இல்லாமல் – தமிழர்களை தொடர்ந்து சிதைக்கும் அரசுகளாக இவ்வரசுககள் எங்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வசதிகளையும், பதவிகளையும் காத்துக் கொள்வதற்காக இன்றைய தமிழக அரசு – நடுவண் அரசுக்கு பணிந்து பயந்து நடந்து கொண்டிருப்பது தமிழர்களின் மிகப் பெரிய இருண்ட வாழ்வியல் துயரம்.
வரலாற்றில் தனித் தாயகம் – தனி அரசு கொண்டு பெருமிதத்தோடு வாழ்ந்த இனம் தமிழினம். மேற்கே கிரேக்கத்துடனும், கிழக்கே சீனத்துடனும் பன்னாட்டு கடல் வாணிகம் செய்த இனம் எங்கள் தமிழினம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பன்னாட்டுக் கடல் வாணிகத் துறைமுகங்கள் பூம்புகாரிலும், கொற்கையிலும் இருந்தன என்பது எங்கள் பெரு வரலாறு.
ஆனால் இன்று கல்வி இழந்து, வேலை இழந்து, நீர்ழந்து, நிலமிழந்து, நிலத்தின் வளமிழந்து, உரிமையிழந்து, இறுதியாக மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் என உயிர்களையும் இழந்து நின்று கொண்டிருக்கிறோம்.
இன்றைய நடுவண் அரசின் மதவாத ஆட்சியாளர்கள் ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என மாற்ற முடிவெடுத்து தனித்தன்மைமிக்க தேசிய இனங்களை காவுவாங்க துடிக்கிறார்கள்.
மனிதம் காக்கும் ஐநா மன்றமே ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழனத்தின் கலைக் கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றினை காப்பாற்ற வேண்டுமாய் இருகரம் இணைந்து உயிர் உருக வேண்டுகிறேன். நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
நன்றி.
வணக்கம்.