நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு கடந்த காலத்தில் விளம்பரங்கள் வாழ்த்துப் பலகைகள் என்பவற்றிற்காக 6 கோடி 60 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தையே முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பிரசாரத்திற்காக பயன்படுத்தியிருப் பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாய்மூல விடைக்காக நளின் பண்டார ஜயமஹா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது,
2009 முதல் 2014 வரையான காலப்பகுதியில் அன்றிருந்த வீடமைப்பு அமைச்சு அனுசரணை அறிவித்தல்கள், வாழ்த்துரை பலகைகள், விளம்பரப்பலகைகள் என்பவற்றைப் பொருத்துவதற்காக 66,026,963 ரூபா செலவிட்டது. வீடமைப்பு வசதி, வீடு நிர்மாணித்தல் என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பணம் இவ்வாறு செலவிடப்பட்டது. ஆனால் இவ்வாறான விளம்பரங்களுக்காக வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட 5 சதத்தைக் கூட நான் வீணாக்க மாட்டேன் என்றார்.