கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் ஆழ்கடல் படகொன்றில் வந்த 35 பேரை வெலிகம பொலிஸ் நிலைய கடற்படை பிரிவினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 5.45 மணியளவில் மிரிஸ்ஸ கடற்பகுதியில் வைத்து பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மாங்குளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எந்த நாட்டுக்கு செல்வதற்காக இவர்கள் இவ்வாறு ஆழ்கடல் வள்ளத்தில் வந்தவர்கள் என்பது பற்றி அறிய முடியாதுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்கள் 35 பேரும் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வெலிகம பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதியப்பட்டன. ஆழ்கடல் வள்ளத்தில் பயணித்த அனைவரும் ஆண்கள் என்பதுடன் இளம் வயதையுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு பொலிஸார் உணவு வசதிகளை செய்து கொடுத்ததுடன் இவர்களின் விசாரணை களின் அடிப்படையில் அவர்களது வதிவிடங்களுக்கு தகவல்கள் அனுப்பட்டுள்ளன.
நேற்று விசாரணைகளின் இறுதியில் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவதாக கூறப்பட்டிருந்த போது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற் றதால் இன்று இவர்கள் 35 பேரும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் ஆழ்கடல் வள்ளம் மூலம் வெளிநாடு களுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.