காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் மைத்திரி அரசு உரிய பதிலைத் தரும் வரை, எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எத்தனை நாள்கள் வீதியில் காத்திருந்தாலும், பன்னாடுகளின் அழுத்தத்துடன் மைத்திரி அரசு எமக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கோரி, அவர்களின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து மழை, வெயில் பாராது அவர்களது போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் திருகோண மலை மாவட்டத்திலும் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்து 6 மாதங்களைக் கடந்துள்ளது. இதுவரை போராட்டத்துக்கான சரியான தீர்வு எவராலும் வழங்கப்படவில்லை. ‘‘ஐ.நா. பிரதிநிதிகள் உட்பட அரசியல்வாதிகளும் நலம் விசாரித்து விட்டுச் செல்கின்றனர்.
எமது பிள்ளைகள் எங்கே என்ற விவரத்தை உரியவரிடம் கேட்கத் தயங்குகின்றனர். எம்மால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை இழந்து இன்று வீதியில் நிற்கின்றோம். நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கின்றோம்.
இன்னும் போராட்ட நாள்கள் நீடித்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. பன்னாடுகளின் அழுத்தத்துடன் அரசு எமக்குத் தீர்வு தரும் என்று எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.