எமது மக்களின் இறையாண்மையின் அடிப் படையில் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் எமக்கு போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது ஆளும் தரப்பினரிடத்தில் நேரடி யாக முன்வைத்தாரா? என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை மையப்படுத்தி தீர்வுத்திட்டம் ஒன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம்
எழுத்துவடிவில் இல்லாத நிலையில் சர்வதேசத்திடம் எமக்கான
தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் “ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்” எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சமஷ்டி சாத்தியமா? புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் தாங்கி வெ ளிப்படையாக இனங்காட்டப்பட வேண்டுமா? எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலுரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றின் உருவாக்கம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் சாசனம் என்பது வருமா வராதா என்ற கேள்வி நிலவிக்கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் சாசனத்தினுடைய இடைக்கால அறிக்கை இந்த வாரம் அடுத்த வாரம் பத்து நாட்களுக்குள் வரலாம் என்று கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் ஆம் திகதி தாக்கல் செய்யப்படவேண்டிய அறிக்கை இது வரை தாக்கல் செய்யப்படவில்லை. இலங்கையில் இருக்கின்ற அரசியல் சாசனம் என்பது ஒற்றையாட்சி முறையைக்கொண்ட யாப்பாக இருக்கின்றது.
அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவு இலங்கை ஒற்றையாட்சி நாடு என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி இலங்கையின் அரசியல் சாசனத்தின் 76 ஆவது பிரிவின் முதலாவது சரத்தின் ஊடாக சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது பாராளுமன்றத்திற்கு மாத்திரமே உரித்தானது. அந்த சட்டமியற்றும் அதிகாரத்தை பாராளுமன்றம் தனக்குக்கீழாக இருக்கக்கூடிய எந்த ஒரு சபைக்கும் அதனை வழங்கமுடியாது என்று கூறுகின்றது. என்னுடைய அறிவுக்கு எட்டியவகையில் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்று அரசியல் அமைப்பு தெளிவாகவே கூறியுள்ளது.
புதிய அரசியல் சாசனம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வியாகவுள்ளது. தந்தை செல்வா காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் வரையில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பினுடைய இறுதியாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் என்னவென்று பார்த்தால் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும், அது தமிழர்களின் தாயகமாக இருக்கின்றது. அதேபோல் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், தமிழ் மக்களுடைய இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் சுயாட்சி உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்றே கூறப்பட்டு வந்துள்ளது.
ஆகவே இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமானால் அந்த அரசியல் சாசனம் என்பது தலகுத்துக்கரணமாக மாற்றப்படவேண்டியுள்ளது. தற்போது ஒற்றையாட்சி அரசு என்றே நாட்டின் தன்மை அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் அரசியல் சாசனத்தினை பொறுத்தவரையில் ஒற்றையாட்சி என்று எழுதப்படாத அரசியல் சாசனமாகும். அங்கிருக்கக்கூடிய ஸ்கொட்லாந்திற்கோ அல்லது வேல்ஸ்க்கோ உரித்தான அதிகாரங்கள் சமஷ்டிக்கும் மேலதிகமான அதிகாரங்களாகவே பகிரப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு தன்னை ஒற்றையாட்சி அரசு என அரசியல் சாசனத்தினூடாக திட்டவட்டமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அவ்வாறான சூழலில் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கும் வகையில் இந்த அரசியல் சாசனம் இருக்கவேண்டுமானால் இந்த அரசியல் சாசனத்தில் பாரிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற அமிர்தலிங்கத்தின் 90 வது சிரார்த்த தினத்தில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பினுடைய தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது எமது மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் எமது மக்களின் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் எமக்கு போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும். இவ்வாறு எமது கோரிக்கைகளை மிகத்தெளிவாக உறுதியாக சர்வதேசத்திடம் விளக்கிக்கூறியுள்ளோம் என கூறியுள்ளார்.
சர்வதேசத்திடம் விளக்கிக்கூறியுள்ளோம் என்றால் இலங்கை அரசாங்கத்திடம் அவ்விடயங்கள் தொடர்பாக உறுதியாகவும் தெளிவாகவும் கூறப்பட்டதா? புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு முன்பாகவோ அல்லது அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற காலகட்டத்திலேயோ மேற்குறித்த உறுதியான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதா?
வடக்கு கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரையில் என்னவெனில் எங்களுடன் அது பற்றி யாரும் பேசவில்லை என்றே ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தெ ளிவாக கூறுகின்றனர். இதேபோல் சமஷ்டி அதிகாரம் பற்றிப்பேசும்போதும் ஒற்றையாட்சியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்றே கூறுகின்றனர். இங்கு உள்ள முரண்பாடுகளைப் பார்க்கும்போது இவை அனைத்தும் இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனவா என்பதுதான் பிரதான கேள்வியாகவுள்ளது.
வடக்குமாகாண சபை, தமிழ் மக்கள் பேரவை, ஒரு அரசியல் சாசனத்திற்காக ஒரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றன. இத்தகைய தீர்வுத்திட்டத்தை அரசியல் அமைப்புச்சபை உள்வாங்கியிருக்கின்றதா? இது தொடர்பில் ஆலோசித்து இருக்கின்றதா? இவை அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என்று பார்த்தால் இவை எவையும் நடைபெறவில்லை.
வடக்குமாகாண சபை என்பது ஒட்டுமொத்த வடக்குமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். அந்த வடக்குமாகாண சபையில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பிற்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட இன்னும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து ஏகமனதாக ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கின்றபோது அதற்கு நாங்களே செவிசாய்க்கவில்லை என்றால் அதனை நாங்களே ஆய்வுக்குட்படுத்தவில்லை என்றால் அரசாங்கம் ஆய்வுக்குட்படுத்துமா என்பது தான் சாதாரணமான கேள்வியாகின்றது.
ஆகவே நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்து தமிழ் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை முன்வைத்து அதற்கான ஆணைகளைப் பெற்று அதற்கு மேலாக மாகாண தீர்வுத்திட்டங்களை இயற்றி அதனை பூர்த்தி செய்த பின்னர் இவை எவையும் தொடர்பில் அரசாங்கத்துடன் எவ்விதமாக பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. அவை புதிய அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை என்றால் அத்தகையதொரு புதிய அரசியல் சாசனத்தைப் பற்றி நாங்கள் எவ்வாறு பேசமுடியும். எங்களுக்கு அமைதியாக இருங்கள் குழப்பாதீர்கள் என்று கூறப்படுகின்றதே தவிர குறித்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேசப்பட்டதா? இல்லையா என்பது குறித்து சொல்லப்படுவதில்லை.
உண்மையான விடயம் என்னவெனில் யுத்தம் முடிந்த பிற்பாடு அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்டிருக்கவேண்டும். அந்த உடன்படிக்கையின் பிரகாரம் புதிய அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே சரியானது. இப்போது கூட அரசாங்கத்துடன் அடிப்படை பிரச்சினைகளை மையமாக வைத்து முழுமையான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
வட கிழக்கு இணைப்பு, மதசார்பற்ற நாடு, சமஷ்டி முறையிலான ஆட்சித்தன்மை என்பவற்றுடன் புதிய அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? இல்லையா? அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படும்? என்பது தொடர்பில் தெ ளிவாக பேசப்படவேண்டும். இவை தொடர்பில் எத்தகைய பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவிருந்தால் இவர்கள் சொன்ன அனைத்தும் இப்போது நிராகரிக்கப்பட்டதாகவே ஜனாதிபதி பிரதமரால் பகிரங்கமாகக் கூறப்படுகின்றது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு இணைப்புஇல்லை, ஒற்றையாட்சி முறைமையிலேயே அரசு , பௌத்தமே முதன்மையானது என்றே அழுத்தம் திருத்தமாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு இருக்குமாக இருந்தால் அதிகாரப் பகிர்வு என்பது என்ன?
என்னைப்பொறுத்தவரையில் இலங்கையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் கிடையாது. ஒற்றையாட்சியில் இருக்கக்கூடிய அதிகாரப்பரவலாக்கம் என்பது மத்தியில் இருக்கக்கூடிய அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதும் தேவையேற்படும் பட்சத்தில் மாகாணத்திற்கு இருக்கின்ற அதிகாரங்களை மத்தி மீண்டும் பெற்றுக்கொள்வதுமேயாகும். அதுவே தற்போதும் நடைமுறையில் இருக்கின்ற விடயமாகின்றது. புதிய அரசியல் சாசனத்தில் இவ்வாறு விடயங்களில் மாற்றம் ஏற்படுமா? தொடர்ந்தும் ஒற்றையாட்சியாக இருக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக அதிகாரப்பகிர்வு என்று சொல்வது சாத்தியமற்ற விடயமாகவே இருக்கும்.
தற்போது ஏகிய ராஜ்ஜிய என்பது சிங்களத்தில் இருக்கும் விடயமானது தமிழிலும் ஆங்கிலத்திலும் வேறுவேறுவடிவத்தில் இடம்பெறலாம் என்றே கூறப்படுகின்றது. எவ்வாறு இருந்தாலும் பொருள்கோடல் செய்கின்ற உயர் நீதிமன்றம் சிங்களத்தில் என்ன இருக்கின்றதோ அதனைத்தான் அவர்கள் கருத்தில் கொள்வார்கள். அந்த வகையில் பார்க்கப்போனால் மிகவும் ஒரு ஏமாற்றத்தனமான முறையில் இந்த அரசியல் சாசனம் தயாரிக்கப்படுவதாகவேதான் எங்களுக்கு தோன்றுகின்றது.
புதிய அரசியல் சாசனத்திற்கான இடைக்கால அறிக்கை வெ ளி வந்தபின்னர் அது மக்கள் மத்தியில் விவாவதற்கு விடப்படும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களாக இல்லையா என்பதனை அறிந்து சரியான வடிவம் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பைப்பொறுத்தவரையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற அடிப்படையில்தான் கடந்த கால அரசியல் சாசனங்கள் இருந்தன. இப்போது உருவாக்குகின்ற அரசியல் சாசனமும் அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றது. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் அந்த அடிப்படையில்தான் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
கடந்த பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்பட்டது. இந்தக்குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து அங்கு ஒரு விவாதம் ஒன்று இடம்பெற்றது. அதாவது உங்களுக்கு சமஷ்டி வேண்டுமா அல்லது வடகிழக்கு இணைப்பு வேண்டுமா? சமஷ்டி வேண்டும் என்றால் வடகிழக்கு இணைப்பைக் கைவிடுங்கள். வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்றால் சமஷ்டியைக் கைவிடுங்கள் என்று கூறப்பட்டது.
இத்தகைய நிலையில் எமக்கு இரண்டுமே தேவை என்று இறுக்கமாக இருந்ததனால் இறுதியில் சரியான முடிவுகளை எட்டமுடியாது அக்குழுவின் செயற்பாடுகள் கைவிடப்பட்டன. இதேபோல்தான் நாங்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோது தற்போது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கு மாகாணங்களுக்கு ஏனைய மாகாணங்களிலும் விட அதிகரித்த அதிகார பகிர்விற்கு தான் தயாராக இருக்கின்றேன் எனக்கூறினார்.
தற்போது கேட்டால் அது அப்போது இருந்த நிலைமை தற்போது அவ்வாறு இல்லை. குறிப்பாக அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தார்கள். இப்போது இல்லை. அதனால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனக்கூறினார்.
சந்திரக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது பிராந்தியங்களின் கூட்டு என்பதைக் கொண்டுவந்தார்கள். இந்தியாவில் எவ்வாறு இருக்கின்றதோ அதேபோல் பிராந்தியங்களின் கூட்டு என்பதை முன்மொழிந்தார். தற்போது அம்முறையையே நடைமுறைப்படுத்துமாறு சந்திரிக்காவிடம் கேட்டால் அவரும் ரணில்போன்றே பதில் கூறுகின்றார்.
இதேபோல்தான் மகிந்த ராஜபக்சவும் ஒரு சர்வ கட்சிக்குழுவை நியமித்தார். அதுவும் தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிக்கக்கூடிய வகையில் தங்களுடைய தீர்வுகள் அமையவேண்டும். இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடைய அரசியல் சாசனத்தைப் பாருங்கள் அதேபோல் ஒரு சாசனத்தை உருவாக்கவேண்டும் எனக்கூறினார்.
இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இருந்த மனோநிலையிலிருநது தற்போது மாற்றம் பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற அடிப்படையில்தான் புதிய அரசியல் சாசன உருவாக்கம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழ் நிலையில் எமது அரசியல் தலைமைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதுதான் எங்களுடைய கேள்வியாகின்றது.
1972 ஆம் ஆண்டு தந்தை செல்வா காலத்தில் அரசியல் சாசனம் வந்தபோது பகிஸ்கரிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு வந்த அரசியல் சாசனத்திலும் தமிழர் விடுதலைக்கூட்டணி பங்குதாரர்களாக இருக்கவில்லை. தற்போது உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனத்தில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பு ஒரு பங்குதாரர்களாக மாறியிருக்கின்றது. அது மட்டுமன்றி நாங்கள் இறுதிவரை முயற்சி செய்வோம் அந்த முயற்சி தோல்வியடைந்தால் நாங்கள் மக்களிடம் சொல்லுவோம் என்று கூறப்படுகின்றது.
உண்மையிலேயே எமது முயற்சி தோல்வி அடையாது முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கருதியிருந்தால் அரசாங்கத்துடன் திட்டவட்டமான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டிருந்தால் அத்தகையதொரு நிலமை ஏற்பட வாய்ப்பில்லை. நீண்ட தூரம் சென்று சில சமயம் தோல்வியடைந்தால் மக்களிடம் பொறுப்புச் சொல்லவேண்டும் என்ற தேவையும் இருந்திருக்காது. அரசாங்கத்திடம் அடிப்படை பிரச்சினைகள் பற்றி குறிப்பாக சமஷ்டியைப் பற்றி வடக்கு கிழக்கு இணைப்பைப்பற்றி பேசியிருந்தால் அரசியல் சாசன உருவாக்கக்குழுவில் இருப்பதா இல்லையா என்பதை தீர்மானித்திருக்கமுடியும்.
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுடன் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் தமிழ்மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பால் ஓர் வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? எழுத்து வடிவில் அவ்வாறு ஒன்றும் இல்லை. வடக்குமாகாணசபை, தமிழ் மக்கள்பேரவை உருவாக்கிய இரண்டு விடயங்கள் தவிர எழுத்து வடிவில் வேறு எதுவும் வெ ளிநாட்டு இராஜதந்திரிக்களுக்கு வழங்கி இது தான் தமிழ்மக்களுக்கு குறைச்த பட்சமாகத் தேவை என்று சொல்லப்பட்டதா?
நாங்கள் தனி நாட்டுக்காக போராடினோம் தற்போது நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் எமக்கு இத்தகையதொரு தீர்வுத்திட்டம் தேவை என்பதை சொல்லக்கூடிய அளவிற்கு நடவடிக்கைள் கூட்டமைப்பின் தலைவரால் செய்யப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்பதே விடையாகும்.
அண்மையில் இந்தியாவில் இருந்து சுஸ்மா சுவராஜ் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெ ளியாகி இருந்தது. அதில் நாங்கள் (இந்தியா) எதிலும் தலையிடப்போவதில்லை. நீங்கள் (இலங்கை அரசாங்கம்) விரைவாக அரசியல் தீர்வுத்திட்டத்தை தயாரித்து முடிவு காணவேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால் எத்தகைய விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் பேசுகின்றதா என்றால் இல்லை என்பதே விடை. நாங்கள் அவர்களுடன் (சர்வதேசத்துடன்) விடயத்தை முன்வைத்து விரிவாகப் பேசாது சர்வதேச சமூகம் எங்களுக்காக எவ்வாறு பேசும் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் தமிழ் மக்களை எங்கு கொண்டு சென்றுவிடும் என்ற அச்ச நிலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. நாங்கள் நெடிய போராட்டத்திற்கு பின்னர் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த பின்னர் எமக்கான அரசியல் தீர்வைநோக்கி போகவேண்டிய தேவை இருக்கின்றது. அதனை நாங்கள் சரியாக செயற்படுத்தப்போகின்றமோ என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன என்றார்.
Home
ஈழச்செய்திகள் எமது மக்களுக்கான தீர்வு வடிவத்தை சம்பந்தன் ஆளும் தரப்புக்கோ சர்வதேசத்திற்கோ வழங்கவில்லை!