யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை அமைதியாக்கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல்களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்களா தேசப்பற்றாளர்கள் என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பினார். இராணுவ வீரர் என்பதற்காகவோ, அதிகாரி என்பதற்காகவோ எவரது குற்றத்துக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. சீருடையில் குற்றம் செய்தாலும் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று சரத் பொன்சேகாவிற்கு எதிராக பொது எதிரணியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக கிரிபத்கொடை பிரதேசத்தில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
என்னை தேசத் துரோகி என விமர்சிக்கும் நபர்கள் யார் என்ற கேள்வி எம்மத்தியிலும் உள்ளது. யுத்த காலகட்டத்தில் அனுராதபுரத்தை தாண்டவே அஞ்சிய நபர்கள் இன்று என்னை துரோகி என விமர்சிக்கின்றனர். இன்று நாட்டில் இவர்கள் சுதந்திரமாக வாழ்வதும் , விரும்பிய இடத்திற்கு சென்று வருவதும் , ஊடகங்கள் மக்கள் அனைவரும் தைரியமாக செயற்படுவதும் என்னால் தான் என்பதனை மறந்துவிடக்கூடாது. நான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த காரணத்தினால் தான் இன்று அனைவரும் சுதந்திரமாக வாழ முடிகின்றது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நான் தேசத் துரோகி என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் பாரிய அளவில் ஊழல் மோசடிகளை செய்த, கொலை கொள்ளைகளை புரிந்த, நாட்டின் ஜனநாயகத்தை பறித்து மக்களின் சுதந்தரத்தை பறித்த மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட்ட நபர்கள் தேசப் பற்றாளர்களா? இந்த வார்த்தையில் எனக்கு சந்தேகம் உள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் நாம் கருத்துக்களை முன்வைக்கும் போது மிகவும் பொறுப்புடனும், அவதானமாகவும் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இராணுவத்தில் குற்றங்கள் புரிந்த நபர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை. மனம்பேரி வழக்கு, எம்பிலிப்பிட்டிய மாணவர் கொலை வழக்குகள் உள்ளிட்ட சம்பவங்களை அனைவரும் தெரிந்திருப்பீர்கள். அப்போது சீருடைக்கு என்று விசேட சலுகைகள் எவையும் யாருக்கும் வழங்கப்படவில்லை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகார்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது அரசாங்கம் மக்கள் பக்கம் இருந்தே செயற்பட்டது. மக்கள் பக்கம் இருந்தே தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழக்கப்பட்டது.
இன்றும் அரசாங்கம் மக்களின் பக்கம் இருந்தே செயற்பட்டு வருகின்றது. மக்கள் பக்கம் நின்று தவறு செய்பவர்களை தண்டித்து செயற்படுவதை தவிர்த்து இராணுவ வீரர் என்ற காரணத்திற்காக, சீருடை அணிந்திருந்த காரணத்தினால் அவரது குற்றங்களை மறைத்துக்கொண்டு மக்களின் நியாயங்களை நிராகரித்தால் அதை மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதனை அனைத்து தலைவர்களும், அரச தலைவர்களும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களின் இழப்புகளுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்றார்.
Home
சிறப்பு செய்திகள் நான் தேசத்துரோகி என்றால் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல் செய்த மஹிந்த யார்? – சரத்பொன்சேகா