ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையைப் பிற் போடுவதற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் ஏற் றுக்கொள்ள முடியாதவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் ஐ.நா. அறிக்கை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
உள்ளக விசாரணையொன்றுக்கு அவகாசம் வழங்கும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா. மேற்பார் வையிலான உள்ளக விசாரணையைக் கூட ஏற்க முடியாது. கடந்த காலங்களில் பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் முடிந்து போன அனுபவங்கள் இருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் பின்னரும் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கூறிவரும் ஒரு விடயம் முன்னாள் ஜனாதிபதியையோ அல்லது இராணுவத்தினரையோ சர்வதேச விசாரணைக்குட்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதேயாகும். இவ்வாறான நிலையில் எவ்வாறு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நம்ப முடியும். எனவே, உள்ளக விசாரணையொன்றும் நடத்தப்படாது என்பதே உண்மையான தாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஐ.நா.வின் அறிக்கை மீது மிகவும் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தனர். எனினும் மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய் யாத வகையிலேயே இது முடிந்துவிட்டது.
ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டால், அது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தமக்குப் பாதிப்பாக அமைந்துவிடும் என புதிய அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமா என்பதே உறுதியாகத் தெரியாத நிலையில் ஐ.நா. விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு தேர்தலைக் காரணம் காட்டியிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.