முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று மாலை காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று லுஹர் தொழுகையோடு (பிற்பகல் 12.30 மணி) தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறவுள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த வாரம் முதல் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வேளையில் தனது 80 வயதில் காலமானார்.
கொழும்பு மஹரகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
1937 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்த அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அத்துடன் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியிலும் மார்க்கக் கல்வி பயின்றுள்ளார். ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்த அவர் ஊடகத்துறையில் பாரிய சேவையாற்றியுள்ளார். மேலும் இவருக்கு இரு ஆண் பிள்ளைகளும் இரு பெண் பிள்ளகளும் உள்ளனர். தனது அரசியல் வாழ்க்கையை லங்கா சமசமாஜக் கட்சியூடாக ஆரம்பித்த அவர் 1955 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார்.