சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கூட்டு எதிரணி நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. . கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 39 எம்.பி. க்களின் கையொப்பங்களுடன் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்காமை என்ற குற்றச்சாட்டுடன்11 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 3.30 மணியளவில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சபாநாயகர் கருஜயசூரியவின் அலுவலகத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, உதய கம்பன்பில, ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சபாநாயகரிடம் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பின்வரும் பதினொரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சில தரப்பினர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்காமை,
அவ்விசாரணைக்கு முகங்கொடுக்காமையினால் அக்குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்கின்ற மனோநிலை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை,
இலங்கையின் மருத்தவக் கல்வியை வணிக ரீதியிலான பின்னணியுடன் வர்த்தக வசமாக்குவதற்கு அரச அதிகாரத்தை தவறான முறையில் பிரயோகித்து இலங்கை மருத்துவக் கல்வித் துறையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு வழியமைத்தமை,
நெவில் பிரனாந்து மருத்துவமனையை அரசுடமையாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டு தனியார் மருத்துவனையொன்றை பொதுமக்கள் நிதியில் கொண்டுநடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை,
வழக்கொன்றின்போது நீதிமன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டிய தகவல்களை சமர்ப்பிக்காமல் சட்டமா அதிபரூடாக சைட்டம் நிறுவனத்திற்கு சார்பான கருத்துகளைத் தெரிவித்து சுகாதார அமைச்சு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை.
இலங்கை மருத்துவ சபையினால் உருவாக்கப்பட்ட வைத்திய கல்வியின் தரத்தை வர்த்தமானி அறிவித்லூடாக பிரசுரிப்பதை வேண்டுமென்றே புறக்கணித்து இலங்கை மருத்துவக் கல்வியின் தரம் தொடர்பில் குழப்ப நிலையை ஏற்படுத்தியமை,
நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்த காலப்பகுதயில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததுடன், டெங்கு நோயாளர்களை அரச மத்துவமனையில் உள்வாங்குவதை நிராகரித்தன் மூலம் மக்களின் உயிர் வாழும் அடிப்படை உரிமையை மீறியமை,
மார்பகப் புற்றுநோய்க்குத் தேவையான மருந்துக் கொள்வனவு விலைமனுக்கோரலில், அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்டநிறுவனத்திற்கு விலைமனு வழங்கிமை உடட்பட அதில் இடம்பெற்றுள்ள மேலும் சில மோசடிகள்,
கடற்றொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்துடன் தொடர்புடைய விலைமனுக்கோரலின் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது மிகக்குறைந்த பெறுமானத்திற்கு விலைமனு வழங்கியதில் இடம்பெற்றுள்ள மோசடி,
கடற்றொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியல் “புளூ ஓஷன் பிஷரிஸ்” நிறுவனத்திற்கு ஆழ்கடலில் மீன்படிப்பதற்கான அனுமதிப்பத்திர வழங்கலில் இடம்பெற்றுள்ள மோசடி ,வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணை நடத்தல் தொடர்பில் நீதிமன்றம் , சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு அழுத்தம் கொடுத்தமை மற்றும் அச்சுறுத்தி நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்குப் பாதகம் ஏற்படுத்துயமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி :வீரகேசரி)