ஹரியானா சாமியார் ஆதரவாளர்கள் வன்முறை; 25 பேர் பலி!

0
193

“தேரா சச்சா செளதா” அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 25 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் தீர்ப்பு வழங்கப்பட்ட பஞ்ச்குலா பகுதியிலும் ஹரியானாவின் பல்வேறு இடங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மலோட் மற்றும் பலுவானா ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் பொது சொத்துகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

டெல்லியில் ரயில், பேருந்துக்கு தீ வைப்பு
டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
இதேபோல டெல்லி, ஜஹாங்கீர்புரியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் ஒரு கும்பல் தீ வைத்து விட்டு தப்பி ஓடியது.


“வடகிழக்கு டெல்லி, லோனியில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு, இரண்டு அரசு பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியது. இதனால் டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்” என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.தட்வாலியா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் உயிரிழப்பு குறித்து கூறுகையில், “கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறைக்கு வந்த தகவலின்படி, பஞ்ச்குலாவில் 17 பேர், சண்டீகரில் காயம் அடைந்த 45 பேரில் 7 பேர், சிர்ஸாவில் ஒருவர் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர்” என்றார்.
மாநில எல்லைகளில் கண்காணிப்பு
பஞ்சாப், ராஜஸ்தான் வழியாக டெல்லிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டீகர் உள்ளது. அதன் புறநகர் பகுதியில் பஞ்ச்குலா உள்ளது. அந்த இடத்திலும் சண்டீகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு ஏற்கனவே மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினரும் உள்ளூர் காவல்துறையினரும் வன்முறையைத் தடுக்க தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு தீர்ப்பு பற்றி விவரம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், பஞ்ச்குலாவில் நீதிமன்ற வளாகத்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங்கள், கடைகள் ஆகியவற்றின் கண்ணாடிகளை குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் அடித்து நொறுக்கினர்.

அரசு பேருந்துகள், வாகனங்கள் ஆகியவற்றையும் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதுவரை பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பஞ்ச்குலாவில் உள்ள சிவில் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்

குர்மீத் சிங் மீதான வழக்கின் தீர்ப்பையொட்டி வன்முறை வெடிக்கலாம் எனக் கருதி ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளான இணையதளம், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், சமூக ஊடகங்களின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஹரியானா மாநில அமைச்சரவை முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூடி அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதல்வர் மனோகர் கட்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலைமைகளை கேட்டறிந்தார்.

BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here