பாலியல் வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த “தேரா சச்சா செளதா” ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2002-ஆம் ஆண்டில் அவரது சீடர்கள் அளித்த பாலியல் புகார்களைத் தொடர்ந்து சாமியார் மீதான வழக்கை பஞ்சாப் – ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து குர்மீத் சிங்குக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இன்று ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ அப்போது நீதிபதி ஜெக்தீப் சிங், பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதையொட்டி சாமியார் குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள், பக்தர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தை சுற்றி நேற்று பிற்பகல் முதல் குழுமியிருந்தனர்.
இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்திலும் பஞ்சாப் – ஹரியானா ஆகிய மாநிலங்களின் எல்லையிலும் உள்ளூர் காவல்துறையினரும் மத்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தீர்ப்பு வெளியாவதையடுத்து நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆஜரானார்.
இந்நிலையில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் துணை ராணுவப் படையினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
அவரை ராணுவ முகாமுக்கு துணை ராணுவப் படையினர் அழைத்துச் சென்றதாக பிபிசி செய்தியாளர் ராபின் சிங் கூறுகிறார்.
இதற்கிடையே, தீர்ப்பை கேள்விப்பட்ட குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் திரளாகக் கூடி அங்கிருந்த காவல்துறையினர் மீது வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். தனியார் தொலைக்காட்சிகளின் நேரலை ஒளிபரப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து வன்முறையாளர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை ஹரியானா மாநில காவல்துறையின் கலவரத் தடுப்புப் படையினர் வீசி கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
இதேவேளை சிர்ஸாவில் உள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தலைமையகத்துக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் செல்லத் தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதனால் குர்மீத் சி்ங்கின் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் பஞ்ச்குலா பகுதியில் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையில் மாநில முதல்வர் தோல்வி அடைந்து விட்டதாக சமூக பயன்பாட்டாளர் அஞ்சலி தமானியா குற்றம்சாட்டி தமது சுட்டுரை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் இருப்பதால் அவர்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்து இந்த விஷயத்தில் போதிய நடவடிக்கை எடுக்காமல் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் மெளனம் காப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.