இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.
அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அத்துல் ஹேசாப் நீதிபதியுடன் தொடர்பு கொண்டு, நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
இதனையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைக்கான விசேட நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அச்சமயம் அமெரிக்க தூதுவராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதிபதியின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தியிருந்தார்.
நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமையாற்றிய போது, அவருக்கு சிக்மா மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருடைய பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த எட்டுப் பேர் அடங்கிய குழுவினர், அவர் நீதிமன்றத்தில் கடமையில் இருக்கும் போது பாதுகாப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் கட்டளையின்படி யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அவருடைய வாசஸ்தலத்துக்குப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.