இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பூரி – ஹரித்வார்- கலிங்கா உத்கல் அதிவேக தொடருந்து, முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (19) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், தொடருந்தின் 14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ படைகள் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, புகையிரத உயரதிகாரிகளும் களத்தில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 இலட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என புகையிரத போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
அத்துடன், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.