இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் நடத்தப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் வழக்கை விசாரிப்பவர்களாக பங்கேற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. மாறாக இந்த பொறிமுறையில் வழக்குகள் உரிய முறையில் விசாரிக்கப்படுகின்றனவா? என்பதனை சர்வதேச நீதிபதிகள் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் எவ்விதமான பரிந்துரைகளும் இல்லை. எனவே எமக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் நாங்கள் பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் புதிய வெ ளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை புதிய வெ ளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் மீளாய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. அதனை நான் 2015 ஆம் ஆண்டே ஆய்வு செய்துவிட்டேன். அது இலங்கைக்கு பாதகமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வெ ளிவிவகார அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நேற்று கொழும்பில் உள்ள வெ ளிவிவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
நான்கு மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் காலை சுபநேரம் 10.05 மணிக்கு வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தனது கடமைகளை பொறுப்பேற்றார். மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் வெ ளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் பிரசாத் காரிய வசம் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் திலக் மாரப்பன தொடர்ந்து கருத்து வெ ளியிடுகையில்
இன்று எனது வாழ்வில் மிகவும் விசேடமான தினமாக அமைந்துள்ளது. நான் எதிர்பார்க்காத வகையில் இந்த முக்கிய பதவி எனக்கு கிடைத்துள்ளது. எனினும் இந்த பதவி எனக்கு கிடைத்ததன் பின்னணியை நினைத்து நான் கவலையடைகின்றேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவியை மிகவும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
வெளிவிவகார அமைச்சு என்பது நாட்டுக்காக பாரதுரமான பொறுப்புகளையும் கடமைகளையும் கொண்டுள்ள அமைச்சாகும். அது தொடர்பில் எனக்கு சிறந்த புரிந்துணர்வு உள்ளது. இந்த அமைச்சுத்தான் எமது நாட்டின் புகழை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்கின்றது. எமது நாட்டின் உண்மைத்தன்மையை வெளிநாட்டவர்களுக்கு எடுத்துக்கூறுகின்ற நிறுவனமே வெளிவிவகார அமைச்சாகும். இதனை உரிய முறையில் செய்யாவிடின் சர்வதேசம் எம்மை நம்பிக்கையற்ற தன்மையுடன் பார்ப்பதற்கு முயற்சிக்கும்.
காரணம் இலங்கையானது மனித உரிமைகளை மதிக்கின்ற நாடாகும். மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வதற்கான சூழலை உருவாக்கவேண்டியது எமது பொறுப்பாகும். முதலீடு செய்வதற்கு இலங்கை சிறந்த நாடு என்பதனை வெளிக்காட்டுவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கவேண்டும். அதற்காகத்தான் எமது நாட்டின் தூதரகங்கள் உலகம் முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எனவே எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது.
இவற்றை சரியாக செய்தால்தான் எமது நாட்டுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். வெளிநாட்டு முதலீடுகளை பெற முடியும். சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும். அதற்கு இலங்கை தொடர்பான சரியான பிம்பத்தை சர்வதேசத்துக்கு வழங்கவேண்டும். அந்த கடமையை நாங்கள் உரிய முறையில் முன்னெடுக்கவேண்டும்.
தற்போது ஆசியுரை வழங்கிய தீனியாவல பாலித்த தேரர் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக நான் கவனம் செலுத்துவேன் என்பதுடன் அது தொடர்பில் விசாரணை ஒன்றிணையும் முன்னெடுப்பேன் என்பதனை இங்கு அறிவிக்கின்றேன். தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மனித உரிமை விவகாரத்தை மிகவும் ஆழமான முறையில் கவனத்தில் எடுப்போம். எந்தவொரு நாட்டுக்கும் அநீதி ஏற்படாத வகையில் சர்வதேச உறவை பேணுவோம். நான் இங்கு குறுகிய காலமே பதவியில் இருப்பேன் என்று எண்ணுகின்றேன். ஆனால் அக்காலப்பகுதியில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவேன் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கேள்வி: யுத்தக் குற்றம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இன்னும் சர்வதேச அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. அதனை எவ்வாறு கையாள்வீர்கள்?
பதில்; அதில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா ஆகியோர் சர்வதேசத்துக்கு சில விடயங்களை உணர்த்தியுள்ளனர். அதாவது இலங்கையானது பொறுப்பற்ற நாடு அல்ல என்பதனை வெளிக்காட்டியுள்ளோம். எனவே மனித உரிமை விடயங்களை ஆழமான விவாகரமாக பார்க்கின்றோம். மனித உரிமை விவகாரம் சரியான முறையில் ஆராயப்படவேண்டும் என்பதனை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
இதனை சர்வதேச நாடுகளை திருப்திபடுத்துவதற்காக நாம் செய்யவேண்டியதில்லை. மாறாக எமது நாட்டின் நலனுக்காக இதனை நாங்கள் செய்யவேண்டும். சர்வதேச அரசாங்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் இவற்றை எமக்கு நினைவூட்டிவருகின்றன. அந்த தேவையை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். பௌத்த கலாசாரம் என்ற வகையிலும் நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம். யாரையும் புன்படுத்தும் தேவை எமக்கு இல்லை. நாங்கள் சமாதானத்தை விரும்பும் மக்கள். மனித உரிமை என்பது கலாசாரத்தில் ஒன்றிப்போன ஒரு விடயமாகும். மனச்சாட்சியுடன் இந்த விடயங்களில் நாங்கள் நடந்துகொள்வோம்.
கேள்வி: புதிய கொள்கைகள் ஏதாவது கொண்டுவருவீர்களா?
பதில்: எனது தனிப்பட்ட கொள்கைகளை இங்கு கொண்டுவர முடியாது. எமது அரசாங்கத்தின் கொள்கைகளை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளை நான் அமுல்படுத்துவேன். நாங்கள் தேசிய அரசாங்கத்தையே நடத்துகின்றோம். அதில் இரண்டு பிரதான கட்சிகள் இடம்பெறுகின்றன. எனவே கூட்டுப் பொறுப்புடன் நாங்கள் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வோம். எனது தனிப்பட்ட கொள்கைகளை இங்கு கொண்டுவர முடியாது.
கேள்வி: இலங்கையில் சித்திரவதைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் தலைமையகத்தில் ஒருவரை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: அது எனக்கு தெரியாது. நானும் பத்திரிகைகளில்தான் அதனை பார்த்தேன். சில புகைப்படங்களை பார்த்தேன். இது இவ்வாறு நடந்தது என்பதனை எம்மால் ஊகிக்க முடியாது. அது விசாரிக்கப்படவேண்டும். தற்போது பொலிஸ் சேவை ஆணைக்குழு உள்ளது. அவர்கள் அதனை பார்த்துக்கொள்வார்கள். அது எனது அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. அது விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படவேண்டிய விடயமாகும். இதனைவிட மிக முக்கிய விடயங்களை நாங்கள் ஆராயவேண்டியுள்ளது.
கேள்வி: அதனை பாரதுரமான விடயமாக நீங்கள் பார்க்கவில்லையா? சித்திரவதை குற்றச்சாட்டு இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில்?
பதில்: அதனை சித்திரவதையாக நான் பார்க்கவில்லை. முதலில் இதனை கூறவேண்டும். சித்திரவதை என்பது ஒருவரை பாரதுரமாக காயப்படுத்தும் விடயமாகும். அதனை நான் அனுமதிக்க வில்லை. ஆனால் இந்த சம்பவத்தை சித்திரவதையுடன் சமப்படுத்த முடியாது. இதுவொரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
கேள்வி: 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக மீளாய்வு செய்யவேண்டும் என எண்ணுகின்றீர்களா? காரணம் சர்வதேச நீதிபதிகள் இதில் பங்கேற்கவேண்டும் என கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. அமெரிக்காவில் கூறியிருந்தார். அதனை தேடிப்பார்ப்பீர்களா? எமது அரசியலமைப்பில் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்பதற்கு இடமுள்ளதா?
பதில்: எமது நாட்டின் அரசியலமைப்பின்படி எந்தவொரு வழக்குக்கும் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க முடியாது. அதனை சரியாக உணர்ந்துகொள்ளவேண்டும். அதனை சர்வதேசத்துக்கும் நாங்கள் கூறிவிட்டோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். சர்வதேசம் எந்த இடத்திலும் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய வழக்கு விசாரணை செயற்பாடு முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசம் இதனை கூறியதாக தெரியவில்லை.
ஆனால் இந்த செயற்பாட்டில் வழக்கு விசாரணையானது சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பதில் திருப்தியடைவதற்காக அந்த வழக்கு விசாரிக்கப்படும்போது சர்வதேச நீதிபதிள் பார்வையாளர்களாக பங்கேற்கவேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் இதற்கு முன்னர் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு ஒரு விடயத்தை கூறுகின்றேன். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழக்கு ஒன்று தொடர்ப்பட்டிருந்தது. அவர் வைத்தியராக செயற்படாமல் சம்பளம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. நான் அந்த வழக்கில் அவருக்காக சட்டத்தரணியாக செயற்பட்டிருந்தேன். அப்போது ஜயலத் ஜயவர்த்தன ஜெனிவாவுக்கு சென்று முறையிட்டிருந்தார்.
அவரின் முறைப்பாட்டுக்கு அமைய ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச நீதிபதி ஒருவரை நியமித்தது. அதாவது அவர் தொடர்பான வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்படுகின்றதா? என்பதனை கண்காணிப்பதற்காக அந்த சர்வதேச நீதிபதி நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முன்னாள் நீதிபதி ஒருவரே இவ்வாறு இலங்கை வந்திருந்தார். அதனை யாரும் எதிர்க்கவில்லை. அப்போதைய அரசாங்கமும் அதனை எதிர்க்கவில்லை. அவர் வந்து நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்கை கண்காணித்தார். அவ்வாறு ஒன்றை செய்வதில் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கேள்வி: நீங்கள் அந்த ஜெனிவா பிரேரணையை ( 30.1) மீண்டும் மீளாய்வு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றீர்களா?
பதில்: நான் அதனை முழுமையாக ஆய்வு செய்துவிட்டேன். அந்த பிரேரணையில் எவ்வாறான விடயங்கள் உள்ளன என்று எனக்குத் தெரியும். நான் 2015 ஆம் ஆண்டு அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதுதான் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் பாரிய பயங்கரமான விடயங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதில் உள்ள விடயங்களை நாங்கள் மிகவும் இலகுவாக அமுல்படுத்த முடியும். மேலும் இந்த பிரேரணைக்கு நாங்கள் ஆதரவு அளித்ததன் மூலம் சிறந்த நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டது. அதன்மூலம் எமது நாட்டுக்கு சாதகத்தன்மை ஏற்பட்டது. நாங்கள் அச்சமடைந்திருந்த வகையில் எந்தவொரு விடயமும் 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் இல்லை.
அந்த பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்த எமக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் மேலதிக அவகாசத்தையும் கேட்டுள்ளோம். தற்போது சர்வதேச எம்மை புரிந்துகொண்டுள்ளது. அதாவது நாங்கள் இவற்றை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்பதனை சர்வதேசம் உணர்ந்துகொண்டுள்ளது. அதனால்தான் எமக்கு உரிய தனித்துவத்துடன் இந்த பொறிமுறையை தயாரிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: நீங்கள் மேலதிக காலத்தை கேட்டுள்ளீர்களா?
பதில்: எமக்கு மேலதிக கால நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்புடன் நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். எனவே பிரேரணையில் உள்ள விடயங்களை நாங்கள் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்பதனை சர்வதேச நாடுகள் உணர்ந்து அதனை ஏற்றுக்கொண்டுள்ளன.
கேள்வி: மேலதிக காலம் தேவை என்று கருதுகின்றீர்களா?
பதில்: எமக்கு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அந்த கால அட்டவணையை நாங்கள் பின்பற்றுகின்றோம். ஆனால் குறுகிய காலத்தில் இவற்றை முன்னெடுக்க முடியாது. இவை மிகவும் பாரதுரமான விடயங்கள். நல்லிணக்கம் நட்டஈடு என்பவற்றை முன்னெடுக்க காலம் தேவையாகும். இவ்வாறான பிரச்சினைகள் உள்ள பொஸ்னியா சூடான் போன்ற நாடுகளில் 20 வருடங்கள் கடந்தும் இன்னும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கேள்வி: இந்த பிரேரணையின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என்று அரசாங்கம் எண்ணுகின்றதா?
பதில்; நிச்சயமாக முடியும். அவை நாட்டை பாதிக்கும் வகையில் இல்லை.
கேள்வி: எனினும் அரசாங்கம் இன்னும் நீதித்துறை பொறிமுறையை முன்னெடுக்கவில்லையே?
பதில்: அந்த நீதித்துறை பொறிமுறையை நாமே முன்னெடுக்கவேண்டும். அது எமது பொறுப்பாகும். நாம் அதனை முன்னெடுத்து சர்வதேசத்துக்கு கூறவேண்டும். தற்போதைய நிலைமையில் சர்வதேசத்துக்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்பதனை காட்டியுள்ளோம். அதுதான் தற்போதைய தேவையாகவுள்ளது. அதனை நாம் செய்துள்ளோம். எமது பக்கத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. மனித உரிமை விடயங்களை முன்னேற்றுவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேசத்துக்கு காட்டவேண்டும். அதனை நாங்கள் செய்துள்ளோம்.
கேள்வி: வேறு நாடுகளுக்கு 20 வருட காலம் வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கை குறுகிய காலத்தில் செய்யவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா?
பதில் :அப்படியில்லை. அவ்வாறு எங்களுக்கு எவ்விதமான அழுத்தமும் இல்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோமா இல்லையா என்பதை பார்ப்பதே சர்வதேசத்தின் தேவையாகவுள்ளது. தற்போது இலங்கையின் நிலைமையை பாருங்கள். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. யாரும் அரசாங்கத்தை பற்றி எழுதலாம். கடத்தல்கள் அச்சுறுத்தல்கள் இல்லை. கருத்து சுதந்திரம் உள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது.
அமைச்சர்கள் நீதித்துறையினால் எவ்வாறு கேள்விஎழுப்பப்படுகின்றனர் என்பதனை நீங்கள் காண்கிறீர்கள். எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இவை இடம்பெறுகின்றன. அதனால் அன்று இருந்த நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையிலான வித்தியாசத்தை சர்வதேச சமூகம் பார்க்கலாம். நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்று அவர்கள் உணர்கின்றார்கள். அதுதான் எமக்கு தற்போது தேவையாக உள்ளது.
எனவே மனித உரிமை விவகாரங்களில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். அதனை சரியான வழியில் நாங்கள் கையாள்கின்றோம். அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல முடியுமாயின் அது மிகப்பெரிய அம்சமாக இருக்கும்.
(ரொபட் அன்டனி) (நன்றி :வீரகேசரி 19.08.2017)