மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் தர்க்கம்!

0
145

மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையில் மன்னார் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர்.இதன்போது திடீர் என அங்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் சுத்தம் செய்யும் பணி தடுக்கப்பட்டதோடு, அனைவரையும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தார்.

எனினும் முன்னாள் போராளிகள் கலைந்து செல்ல முடியாது எனவும், குறித்த துயிலும் இல்லத்தில் இறந்தவர்கள் எங்கள் இனத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் எனவும் எனவே இவர்களை நினைவு கூர வேண்டியது எங்கள் கடமை எனவும் ஜனநாயக உரிமையை எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி தொடர்பாக எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும் பிராந்திய பொலிஸ் நிலையத்துக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை எனவும், எனவே சுத்தம் செய்யும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதனால் முன்னாள் போராளிகள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஆள்காட்டி வெளிப் பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனை கட்டுப்படுத்தும் முகமாக முன்னாள் போராளிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 5 நிமிட நினைவஞ்சலி நிகழ்வை மட்டும் நடத்துவதற்கான அனுமதியை பொலிஸார் வழங்கியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளினால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றப்பட்டு தமிழ் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here