வடகிழக்கு நைஜீரியாவில் மூன்று பெண் தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர்.
பொகோ ஹராம் ஆயுதக் குழு பலம் கொண்டிருக்கும் போர்னோ மாநிலத்தின் மெய்டுகுரி நகருக்கு அருகில் உள்ள அகதி முகாமுக்கு வெளியில் இந்த பெண்கள் கட்டி வந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் பலரும் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமிய அரசொன்றை உருவாக்கவெனக் கூறி கடந்த 2009 தொடக்கம் பொகோ ஹராம் இங்கு போராடி வருகிறது. அகதி முகாமுக்கு அருகில் முதல் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்தபின் மக்கள் பீதியடைந்த நிலையில் இருக்கும்போது ஏனைய பெண்கள் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்ததால் உயிரிழப்பு அதிகரித்ததாக அங்குள்ளவர்கள் விபரித்துள்ளனர்.
பொகோ ஹராம் வீழ்த்தப்பட்டதாக அரசு கடந்த ஆண்டு அறிவித்தபோதும் அந்த குழுவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. போர்னோ மாநிலத்தில் பொகோ ஹராம் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதால் அங்குள்ள மக்கள் அகதி முகாம்களை நாடி வந்தவண்ணம் உள்ளனர்.