புதிய வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட் டியல் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நேற்று மைததிரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க தனது பதவியை கடந்தவாரம் இராஜினாமா செய்த நிலையிலேயே புதிய வெளிவிவகார அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கியதேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான திலக் மாரப்பனவே வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் கட்சி மட்டத்தில் வலுப்பெற்று வந்த நிலையிலேயே அவர் இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி ஐக்கிய தேசியக்கட்சி திலக் மாரப்பனவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரை செய்த நிலையில் அவர் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாரளுமன்ற உறுப்பினரான திலக் மாரப்பன அரசாங்கத்தில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு அமைச்சராக பணியாற்றியிருந்தார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் எவன்ட்காட் விவகாரத்தில் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின்போது திலக் மாரபன மீண்டும் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அந்தவகையிலேயே தற்போது அவர் புதிய வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். திலக் மாரப்பன கடந்த 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்திருந்தார். அத்துடன் முன்னாள் சட்டமா அதிபராகவும் திலக் மாரப்பன பதவிவகித்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து வெளிவிவகார அமைச்சானது ஐக்கிய தேசியக்கட்சியின் வசமே இருந்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சர் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம்திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தேசிய நல்லாட்சி அரசாங்கத்திலும் மங்கள சமரவீரவே வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஐக்கியதேசியக்கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும் அமைச்சுப்பொறுப்புக்கள் தொடர்பான இணக்கப்பாட்டின் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சு ஐக்கியதேசியக் கட்சியிடமே இருந்து வருகிறது. அதன்படியே தற்போதும் வெளிவிவகார அமைச்சுப் பதவியானது ஐக்கிய தேசியக்கட்சியின் வசமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிய பிரசாத் காரியவசம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எசல வீரகோனுக்குப் பதிலாகவே பிரசாத் காரியவசம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாத் காரியவசம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இலங்கையின் தூதுவராக பதவிவகித்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.