14.08.2006 அன்று சிறீலங்கா பேரினவாத அரசின் மிலேச்சத்தனமான விமானக்குண்டுவீச்சினால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவிகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மற்றும் 27.08.2011 அன்று பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட தூக் குத் தண்டனையை ரத்துசெய்யக்கோரி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தன்னைத் தீயிற்கு ஆகுதியாக்கிய வீரத்தமிழிச்சி தோழர் செங்கொடி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் பிரான்சு பாரிசு Republique பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (15.08.2017) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 07.03.2009 அன்று முகமாலையில் நடந்த நேரடிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வினிதரனின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தமிழ்ப் பெண்கள் அமைப்பு உறுப்பினர் திருமதி ஜினேஸ் அவர்களின் பேச்சு,
வில்லிய லூபெல் தமிழ்ச்சோலை திருமதி கங்காதரன் மலர்விழி அவர்களின் கவிதை, தமிழ் இழையோர் அமைப்பு உறுப்பினர் செல்வன் விவியன் சுபாஸ்கரன அவர்களின் பிரெஞ்சு மொழியிலான பேச்சு, செல்வி திலீப்குமார் திசானிகா அவர்களின் கரோக்கி பாடல் , பாரிசு சோதியா கலைக்கல்லூரி மாணவன் செல்வன் ராஜ்குமார் இளங்கதிர் அவர்களின் தனிநடிப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, செல்வி ஸ்ரீரங்கன் கரினி அவர்களின் நடனம் (பாடல் செந்தமிழ் தூளியிலே), செல்விகள் திலீப்குமார், தானுகா கோகுலதாஸ் சூரியா ஆகியோரின் நடனம் (செஞ்சோலை நினைவுப்பாடல்) போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிறப்பு உரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரை பொறுப்பாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
இந்நிகழ்வுகளை வேற்று இனத்தவர்களும் ஆர்வத்துடன் கேட்டு, கண்டு, கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)
Home
ஈழச்செய்திகள் பிரான்சில் செஞ்சோலை மாணவிகள் மற்றும் வீரத்தமிழிச்சி செங்கொடி நினைவு வணக்க நிகழ்வு!