பிரான்சில் விடுதலைச்சுடர் 17.02.2015 அன்று பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரில் தியாகதீபம் திலீபனின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் சிவசோதி அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விடுதலைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு தமிழீழ தேசியக்கொடியினையும், பிரெஞ்சு தேசியக்கொடியினையும், ஐரோப்பியக் கொடியினையும் தாங்கி சிறியவர்கள், பெரியவர்கள் தாங்கி வீதிவழியாக துண்டு பிரசுரங்களை வழங்கிய வண்ணம் 5 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாகச் சென்று மாநகரசபையினை அடைந்தனர். ,வர்களை எதிர்பார்த்து மாநகர முதல்வர் காத்து நின்று வரவேற்றிருந்தார். இவர்களால் கொண்டு வரப்பட்ட விடுதலைச்சுடரினை தானும் கையில் பெற்றதோடு எமது மக்களால் கொடுக்கப்பட்ட மகஜரினையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் தன்னுடைய மாநகரத்தில் நிறுவப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவு மண்டபத்தை அகற்றும் படி பிரான்சில் அமைந்து சிறீலங்கா தூதுவராலயம் தனக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்திருந்ததாகவும், தான் அதற்கு சரியான பதில் கொடுத்துள்ளதையும் தமிழீழ மக்களின் நியாயமான நீதியான போராட்டத்திற்கு தொடர்ந்து தாம் தமது பங்களிப்பையும் குரலையும் தொடர்ந்து கொடுத்து வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் விடுதலைச்சுடரினை தங்கள் கரங்களிலும் ஏந்தியிருந்தனர். விடுதலைச்சுடர் உரையினைத் தொடர்ந்து மாலை பாரிசின் மக்கள் சுதந்திர விடுதலை திடல் நோக்கி செல்லவிருந்த சுடரினை தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் பெறுப்பேற்றிருந்தனர். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தாரகமந்திரத்தை உச்சரித்து விடுதலைச்சுடர் புறப்பட்டுச்சென்றது.