மட்டக்களப்பு – பட்டிருப்பு பாலத்தடியில் உள்ள மாரியம்மன் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பட்டிருப்பு பாலத்தின் மறு முனையில் உள்ள மக்களால் குறித்த சிலை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சிலை உடைக்கப்பட்டு பட்டிருப்பு ஆற்றில் தூக்கி வீசப்பட்டு பின்னர் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு சமூகமளித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை சிலையை பார்த்துள்ளதுடன், அங்கு நின்றவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இங்கு நடைபெற்ற சம்பவமானது ஒரு மதத்தினை மலினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும். இதனை யார் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு சிலையினை உடைத்து அதனை தூக்கி ஆற்றில் வீசி விட்டு செல்வதென்பது ஒட்டு மொத்த இந்துக்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.