குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களை தண்டனையிலிருந்து மீட்டு எடுப்பதற்கு அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குவைத்தில் சக இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றார்.
குவைத் வாழ் இலங்கையர்களின் நிதி உதவியுடன் இரத்த நட்டஈட்டை வழங்கி, இந்த இலங்கையர்கள் மரண தண்டனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய இலங்கையர் 43 வயதான ஓர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத் சென்ற குறித்த இலங்கைப் பெண் போதைப் பொருள் விற்பனை செய்தார் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
குவைத்திற்கான இலங்கை தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளின் முயற்சியினால் இவ்வாறு இரண்டு இலங்கையர்களும் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட வீட்டுப் பணிப் பெண்ணின் சார்பிலான மேன்முறையீட்டு மனுவிற்காக நீதிமன்றில் வாதாடிய அந்நாட்டு சட்டத்தரணி அல் சமாலி பணம் எதனையும் அறவீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.