யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்த 5 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
ஏற்கனவே நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்ட 5 மணி நேர
சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த ஜூலை 9 ஆம் 10 ஆம் திகதிகளில் பருத்தித் துறை மணல்காடு பகுதியில் மணல் லொறி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் ஜூலை 21 ஆம் திகதி மணல்காடு பகுதியில் கடலோர பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களும் உள்ளடங்குவதாகவும் சுற்றிவளைப்பை நெறிப்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் சட்டவிரோத மாடறுப்பு நிலையம் ஒன்றும் நேற்று இந்த சுற்றி வளைப்பின் போது சிக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் உத்தரவுக்கு அமைய நேற்று அதிகாலை 4.00 மணி முதல் முற்பகல் 9.00 மணிவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, பருத்தித் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மாசிங்க ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் வடமராட்சி, துன்னாலை கிழக்கு பகுதியில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
குடவத்தை வேம்படி மற்றும் துன்னாலை பகுதிகள் முற்றாக பொலிஸ் சுற்றிவளைப்பு நேற்று உள்ளாகின. இதன் போது 52 பொலிஸ் மற்ரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் ஆயுதம் தாங்கி சுற்றிவளைப்பை முன்னெடுத்ததுடன் மேலும் சில குழுவினர் அவசியம் ஏற்படும் போது அப்பகுதியை சுற்றிவளைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதே 10 சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸார் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் கைப்பற்றினர். கைதானவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஜூலை 9 ஆம் திகதி பருத்தித்துறை மணல் காட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்னம் செயற்பட்டவர்கள் எனவும் அவர்கள் மறுநாள் பொலிஸ் காவலரண் ஒன்றினை உடைத்து தீயிட்டமை, வீதிகளில் ரயர்களை எரித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
அத்துடன் பிரதேசத்தில் சட்ட விரோத மாடறுப்பு நிலையம் ஒன்றினை நடாத்திவந்தமை தொடர்பிலும் சட்டவிரோத இறைச்சியை தம் வசம் வைத்திருந்தமை தொடர்பிலும் இருவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சுற்றி வளைப்பின் போது தப்பிச் சென்றுள்ள நிலையில் பின்னர் அவர்களை தேடிக் கண்டுபிடித்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதானவர்கள் இன்று பருத்தித் துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் வடமராச்சி பிரதேசத்தில் நேற்று முன் தினமும் பொலிஸாரும் ஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. துன்னாலை தெற்கு பிரதேசத்தில் நேற்று முன் தினம் அதிகாலை 4.30 மணி முதல் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்தது.